இந்தியா

திடீர் அரசியல் குழப்பம்: ஹரியானாவில் பாஜக கூட்டணி அரசுக்கு ஆபத்தா..?

Rasus

ஹரியானாவில் எழுந்துள்ள திடீர் அரசியல் குழப்பங்களால், அம்மாநிலத்தில் பாஜக கூட்டணி ஆட்சி தொடர்ந்து நீடிக்குமா என சந்தேகம் எழுந்துள்ளது.

ஹரியானாவிலுள்ள 90‌ சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.‌ 46 இடங்களை பெற்றால் மட்டுமே ஆட்சியமைக்க முடியும் என்ற நிலையில், 40 இடங்களை மட்டுமே பாஜக வென்றது.‌ தனித்து போட்டியிட்ட காங்கிரஸ் 3‌1 இடங்களைப் பெற்றது. ஹரியானாவின் முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவின் பேரன் துஷ்யந்த் சவுதாலாவின் புதிய கட்சியான ஜனநாயக ஜனதா கட்சி 10 இடங்களை கைப்பற்றியது. சுயேச்சைகள் 7 இடங்களில் வென்றனர்.

ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்காத நிலையில், துஷ்யந்த் சவுதாலாவின் ஆதரவைப் பெற்ற பாரதிய ஜனதா அங்கு மீண்டும் மனோகர் லால் கட்டார் தலைமையில் ஆட்சியமைத்தது. துஷ்யந்தின் கட்‌சிக்குள் எழுந்துள்ள கருத்து வேறுபாடுகளால் பாரதிய ஜனதா தலைமையிலான அரசு நீடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஜாட் இனத்தைச் சேர்ந்த துஷ்யந்த் சவுதாலாவை, அவரது சொந்த இன மக்களின் வாக்குகளே தேர்தலில் கிங் மேக்கராய் மாற்றியது. ஹரியானாவின் மக்கள் தொகையில் 4-ல் ஒரு பகுதி அதாவது 28 சதவீதம் வரையுள்ள ஜாட் இன மக்களே 2014-ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு வரை மாநிலத்தில் யார் ஆட்சியமைக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பவர்களாக இருந்தனர்.

ஜாட் மக்களின் அதிகாரம் மற்ற இன மக்களின் அதிகாரத்தை குறைப்பதாக இருப்பதாகக் கூறியே 2014-ஆம் ஆண்டு பாஜக ஹரியானாவில் ஆட்சியை பிடித்தது. ஜாட் இனத்தைச் சாராத ஒருவர் முதன் முறையாக ஹரியானாவின் முதலமைச்சரானதும் அப்போதுதான். சட்டமன்றத் தேர்தலில் துஷ்யந்த் சவுதாலா பாஜகவுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அவரது இந்த உத்திதான் ஜனநாயக ஜனதா கட்சி 10 இடங்களில் வெற்றிபெற வைத்தது.

எந்தக் கட்சியை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டாரோ, அதே பாஜகவுடன் தேர்தலுக்கு பின் கூட்டணி வைத்து துணை முதல்வர் பதவியும் பெற்றதால், துஷ்யந்த் சவுதாலா மீது ஜாட் இன மக்கள் கடும் கோபத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

தேர்தலின் போது பாஜகவுக்கு எதிராக துஷ்யந்த் முன்வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. அதனால், துஷ்யந்த் சவுதாலாவின் கட்சிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. ஜனநாயக ஜனதா கட்சியின் துணைத்தலைவரும் எம்.எல்.ஏவுமான ராம்குமார் கெளதம் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கட்சியினரோடு ஆலோசிக்காமல் பாஜகவுடன் துஷ்யந்த் கூட்டணி வைத்துவிட்டதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும் சில எம்.எல்.ஏக்கள் கட்சியிலிருந்து விலகலாம் எனக் கருதப்படுவதால் ஹரியானாவில் பாஜக கூட்டணி ஆட்சி தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.