குஜராத் மாநிலம் உருவாகி 57 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் அம்மாநிலம் கண்ட அரசியல் மாற்றங்கள் குறித்து தெரிந்துகொள்வோம்.
இந்திய சுதந்திரத்தின்போது மும்பை மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்த குஜராத் 1960-ம் ஆண்டு தனி மாநிலமாக உருவானது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜீவராஜ் நாராயண் மேத்தா குஜராத்தின் முதல் முதலமைச்சராக தேர்வானார். இதன்பின் 15 ஆண்டுகள் குஜராத் தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சியின் கீழ் இருந்தது. 1975-ல் முதன்முறையாக ஜனதா மற்றும் ஸ்தாபன காங்கிரஸ் கட்சிகள் இணைந்து காங்கிரஸ் அல்லாத முதல் அரசை பாபுபாய் பட்டேல் தலைமையில்
குஜராத்தில் அமைத்தன.
இதன்பின் 1990-ல் பாரதிய ஜனதா ஆதரவுடன் ஜனதாதள் கட்சி குஜராத்தில் ஆட்சி அமைத்தது. அப்போது சிமன்பாய் படேல் முதல்வராக இருந்தார். இதைத்தொடர்ந்து 1995-ல் நடைபெற்ற தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றிபெற்று கேஷுபாய் படேல் தலைமையில் ஆட்சி அமைந்தது. ஆனால் இது ஓராண்டுக்கு மட்டுமே நீடித்தது.
1998-ல் நடந்த தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றிபெற்று கேஷுபாய் பட்டேல் மீண்டும் முதல்வரானார். இதைத்தொடர்ந்து 2002-ல் நடந்த தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. நரேந்திர மோடி முதல் முறையாக முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார். அடுத்து 2007 மற்றும் 2012-ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களிலும் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா வெற்றிபெற்று ஆட்சியைத் தொடர்ந்தது. 2014-ல் மோடி பிரதமராக பதவி ஏற்றதால் அவருக்கு பதில் ஆனந்தி பென் பட்டேல் முதல்வராக்கப்பட்டார். ஆனால் பட்டேல்கள் போராட்ட எழுச்சி உள்ளிட்ட காரணங்களால் ஆனந்திக்கு பதில்
கடந்தாண்டு விஜய் ருபானி முதல்வராக்கப்பட்டார்.
1960 முதல் 1996 அவ்வப்போது ஏற்பட்ட அரசியல் குழப்பங்களால் 5 முறை குடியரசுத் தலைவர் ஆட்சிக்கும் குஜராத் ஆட்பட்டிருந்தது. குஜராத்தில் காங்கிரஸ் கட்சி பாரதிய ஜனதாவிடம் ஆட்சியை இழந்தது 22 ஆண்டுகள் ஆகின்றன. இழந்த ஆட்சியை மீட்கும் முயற்சியில் காங்கிரஸ் தீவிரமாக உள்ள நிலையில் மறுபுறம் தொடர்ந்து கால் நூற்றாண்டு ஆண்ட பெருமையை பெற பாரதிய ஜனதா முனைப்போடு செயலாற்றி வருகிறது.