இந்தியா

நடுரோட்டில் பெண் காவலர் எரித்துக் கொல்லப்பட்டது ஏன்? பரபரப்பு தகவல்!

webteam

கேரள மாநிலம் மாவேலிக்கரையில் நடுரோட்டில் பெண் காவலர் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்டது ஏன் என்பது தெரிய வந்துள்ளது.

கேரள மாநிலம் மாவேலிக்கரையில் உள்ள வல்லிக்குன்னம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தவர் சவுமியா (32). இவர் வழக்கம் போல பணியை முடித்து விட்டு இரு சக்கர வாகனத்தில் நேற்று வீட்டுக்குச் சென்றார். அப்போது அவரை பின் தொடந்து வந்த கார் ஒன்று வாகனத்தின் மீது மோதியது. கீழே விழுந்த சவுமியாவை, காரில் இருந்து இறங்கிய இளைஞர் அரிவாளால் வெட்டினார். மேலும், கேனில் எடுத்து வந்த பெட்ரோலை சவுமியா மீது ஊற்றி தீ வைத்தாகத் தெரிகிறது.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இந்த தீ விபத்தில் அந்த இளைஞருக்கும் தீ பிடித்தது. அங்கிருந்து தப்பியோட முயன்ற அவரை பொதுமக்கள் பிடித்தனர். அதற்குள் தீயில் எரிந்து சவுமியா உயிரிழந்தார். 

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், பிடிபட்ட இளைஞரிடம் விசாரணை நடத்தியதில், ஆலுவா காவல் நிலையத்தில் போக்குவரத்து காவலராக பணியாற்றி வரும் அஜாஸ் என்பது தெரியவந்தது. அஜாஸ் 40 சதவிகித தீக்காயத்துடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப்பெற்று வருகிறார். சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

சவுமியா கடந்த 4 வருடத்துக்கு முன் திருச்சூர் போலீஸ் அகாடமியில் பயிற்சிக்கு சென்றபோது அங்கு பயிற்சியாளராக இருந்தார் அஜாஸ். அப்போது இருவருக்கும் நட்பு ஏற்பட்டது. பின்னர் வல்லிக்குன்னம் காவல் நிலையத்தில் காவலராக நியமிக்கப்பட்டார் சவுமியா. அஜாஸ், ஆலுவா காவல்நிலையத்துக்கு சென்றார். அங்கிருந்து சென்ற பின்னும் இருவரும் நட்பை தொடர்ந்துள்ளனர். அஜாஸ், தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி சவுமியாவை தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். அதற்கு அவர் மறுத்துள்ளார். இதையடுத்தே இந்த சம்பவம் நடந்து ள்ளது. 

சவுமியா தனது வேலையில் நேர்மையானவர் என்றும் சிறப்பாக பணியாற்றும் அவர் மீது எந்த புகாரும் இல்லை என்றும் அவருடன் பணியாற்றியவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் உயிரிழந்த சவும்யாவின் தொலைபேசியையும் அஜாஸின் தொலை பேசியையும் ஆய்வு செய்யவும் திருச்சூரில் சவுமியாவுடன் பயிற்சியில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.