இந்தியா

பெண் காவலர்களிடம் ஆபாசமாக நடந்துகொண்ட எஸ்.பி : ஊரடங்கில் அவலம்..!

பெண் காவலர்களிடம் ஆபாசமாக நடந்துகொண்ட எஸ்.பி : ஊரடங்கில் அவலம்..!

webteam

புதுச்சேரியில் பணியிலிருந்த பெண் காவலர்களிடம் ஆபாசமாக நடந்துகொண்ட காவல்துறை எஸ்பி கைது செய்யப்பட்டார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க வரும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மக்கள் கூடுவதை தடுக்கவும், கொரோனா பரவுதலை தடுக்கவும் போலீஸார் நேரம் பார்க்காமல் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரியில் எஸ்.பி ஒருவரின் செயல் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. புதுச்சேரி ஐஆர்பிஎன் பிரிவு எஸ்.பி சுபாஷ் என்பவருக்கு திருபுவனை, மதகடிப்பட்டு உள்ளிட்ட கிராமப்புற பகுதிகளில் ஊரடங்கு கண்காணிப்பு பணி ஒதுக்கப்பட்டிருந்தது.

அதேபகுதியில் பணியிலிருந்த ஊர்காவல்படை பெண் காவலர்களிடம் சுபாஷ் ஆபாசமாக நடந்துகொண்டதாக திருபுவனை காவல்நிலைய போலீசாருக்கு புகார் சென்றது. இதனையடுத்து திருபுவனை போலீசார் சம்பந்தப்பட்ட பெண் காவலர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் எஸ்.பி சுபாஷ் பெண் காவலர்களிடம் ஆபாசமாக நடந்துகொண்டது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து காவல்துறை தலைமையகம் உத்தரவின் பேரில், சுபாஷ் மீது 4 பிரிவுகளின் கீழ் திருபுவனை காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். தற்போது சுபாஷிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.கொரோனா ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஆபாசமாக நடந்து கொண்டதற்காக, எஸ்.பி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் புதுச்சேரி காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.