இந்தியா

சாலையில் நின்ற பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கும் போலீஸ்... அதிர்ச்சி வீடியோ

சாலையில் நின்ற பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கும் போலீஸ்... அதிர்ச்சி வீடியோ

webteam

மத்தியப் பிரதேசத்தில் இளம்பெண் ஒருவரை, காவலரே பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில், இரவு நேரத்தில் சாலையோரம் நின்றிருந்த பெண்ணிடம் போலீஸ்காரர் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபடும் காட்சிகள் அங்குள்ள கேமராவில் பதிவாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. சாலையோரத்தில் நிற்கும் அந்தப் பெண்ணிடம், பைக்கில் அமர்ந்திருக்கும் போலீஸ்காரர் பாலியல் தொல்லை செய்வதும் அதிலிருந்து அந்தப் பெண் தப்பிக்க முயலும் காட்சிகளும் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளன. இந்த நிகழ்வு போபாலில் உள்ள ஹனுமங்கஞ்ச் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அல்பனா டாக்கீஸ் அருகே பதிவான வீடியோ என தெரிய வந்துள்ளது.

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ள நிலையில், பலரும் மத்தியப் பிரதேச அரசுக்கு எதிராக கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். அங்கு சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சியில் உள்ளது. இந்த வீடியோ குறித்து மத்தியப் பிரதேச மகளிர் ஆணைய உறுப்பினரும், காங்கிரஸ் தலைவருமான சங்கீதா சர்மா, “பாஜக ஆட்சியில், பாதுகாவலர்கள் வேட்டையாடுபவர்களாக மாறிவிட்டனர். போபாலில் உள்ள அல்பனா டாக்கீஸ் அருகே, இரவில் தனிமையில் நின்ற பெண்ணிடம் காவலர் ஒருவர் சில்மிஷம் செய்ததைக் காணும்போது, காவல்துறையின் மனிதாபிமானமற்ற முகம் அம்பலமாகியுள்ளது. ஹனுமங்கஞ்ச் காவல் நிலையத்தின் கீழ் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இது உண்மையிலேயே வெட்கக்கேடானது" என தெரிவித்துள்ளார்.

நாளை (மார்ச் 8) சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட இருக்கும் நிலையில், பெண்களுக்கு எதிராக இப்படி ஒரு வீடியா வெளியாகி இருப்பது நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையவில்லை என்பதற்கு இது ஒன்றே உதாரணம் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

- ஜெ.பிரகாஷ்