15 ஆண்டுகளுக்கு முன் போலீஸில் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக இருந்த காவல்துறை அதிகாரி, தற்போது வீதிகளில் உணவுக்காக யாசகம் ஏந்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் யார் என்பதைப் பார்ப்போம்.
மத்தியப் பிரதேச காவல்துறையில் 1999ல் உதவி ஆய்வாளராக பணிக்குச் சேர்ந்தவர் மனீஷ் மிஸ்ரா. இவரின் தந்தை, சகோதரர் என குடும்பமே போலீஸ் என்பதால் இளம் பருவத்திலேயே காவல்பணியில் தன்னை இணைத்துக்கொண்டு இருக்கிறார் இந்த மனீஷ் மிஸ்ரா.
சிறந்த தடகள வீரராக அறியப்பட்ட மனீஷ், துப்பாக்கிச் சுடுவதிலும் நிபுணத்துவம் பெற்றிருந்தார் எனக் கூறப்படுகிறது. இதனால்தான் வேலைபார்த்த காலகட்டத்தில் சில என்கவுன்டர்களையும் செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் பல மாவட்டங்களில் காவல் பணியை சிறப்பாக செய்த மனீஷ், கடைசியாக 2005ல் தாட்டியா மாவட்டத்தில் பணியாற்றியபோது திடீரென காணவில்லை. இதன்பின் அவரை எங்கும் தேடியும் கிடைக்கவில்லை.
15 வருடங்கள் இப்படியே கழிந்த நிலையில், சில நாட்களுக்குமுன் குவாலியரில் தேர்தல் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தபோது இரவு நேரத்தில் நகரில் ரோந்து சென்றிருக்கிறார்கள் காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் ரத்னேஷ் சிங்கும், விஜய் சிங் பதோரியா என்பவர்கள். அப்போது அங்கு குளிரில் நடுங்கிக்கொண்டிருந்த மனநிலை பாதித்த யாசகருக்கு இருவரும் உதவியுள்ளனர். தங்களின் ஜாக்கெட் ஒன்றையும், காலணியையும் இருவரும் அந்த யாசகருக்குக் கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர முற்பட்டுள்ளனர்.
அப்போது, இருவரையும் பார்த்த அந்த யாசகர், கண்காணிப்பாளர்கள் பெயரைச் சரியாக சொல்லியிருக்கிறார். இதில் ஆச்சர்யம் அடைந்த அவர்கள், யாசகம் எடுத்துவருவது யார் என்று விசாரித்துள்ளனர்.
ஆம், அவர்தான் 15 ஆண்டுகள் முன்பு காணாமல்போன மனீஷ். ரத்னேஷ் சிங், விஜய் சிங் உடன் பணிபுரிந்து இருக்கிறார் மனீஷ். இதனை ஞாபகம் வைத்து இருவரையும் அடையாளம் கண்டுள்ளார். ஆனால், அவர்களால் மனீஷை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. காரணம், கிழிந்த கந்தலாடை, அழுக்கு நிறைந்த தோற்றம், வருடக்கணக்கில் சவரம் செய்யப்படாத தாடி, மீசை என ஆளே மாறிப்போய் காட்சி அளித்திருக்கிறார் மனீஷ்.
மனீஷை கண்டுபிடித்த சந்தோஷத்தில் அவரை அப்படியே விட்டுவிடாமல், ஸ்வர்க் சதன் என்ற ஆதரவற்றோர் தங்குமிடத்தில் அவரைச் சேர்த்ததுடன், ஆதவற்றோர் இல்லத்தின் உதவியுடன், முகச்சவரம் செய்து புதிய ஆடை உடுத்த வைத்து பழைய மனீஷாய் அவரை மாற்றினார் காவலர்கள் இருவரும்.
மேலும், மருத்துவரை வரவழைத்து அவருக்கு தேவையான பரிசோதனைகளை செய்யவும் உதவி புரிந்துள்ளனர். தாட்டியா மாவட்டத்தில் மனீஷ் பணிபுரிந்தபோது, அவருக்கு மனநிலை சரியில்லாமல் போயிருக்கிறது. இதனால் அவர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு இருக்கிறார்.
அத்துடன், அவருக்கு அவரின் குடும்பத்தார் சிகிச்சை எடுக்க வைத்துள்ளனர். ஆனால், மனீஷ் அவ்வப்போது வீட்டை விட்டு வெளியேறி சென்றிருக்கிறார். அப்படி ஒருநாள் சென்றவர்தான் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதன்பின் பல இடங்கள் தேடியும் கிடைக்காத நிலையில் குவாலியரில் தன் சக காவலர்களிடம் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் சிக்கியிருக்கிறார்.
தற்போது அவரின் குடும்பத்தை கண்டுபிடிக்கும் பணிகளும், அவரின் இந்த நிலைக்கு என்ன காரணம் என்பது போன்ற விசாரணைகள் போய் கொண்டிருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.