இந்தியா

கூரியர் மற்றும் பார்சலில் போதைப்பொருட்களை கடத்தப்படுவதை தடுக்க போலீசார் தீவிரம்

கூரியர் மற்றும் பார்சலில் போதைப்பொருட்களை கடத்தப்படுவதை தடுக்க போலீசார் தீவிரம்

கலிலுல்லா

கூரியர் மற்றும் பார்சலில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க கூரியர் நிறுவன உரிமையாளர்களுக்கு காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர்.

சென்னையில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களை தடுப்பதற்காக சென்னை காவல்துறை டிரைவ் அகைன்ஸ்ட் டிரக்ஸ் ஆப்பரேஷன் தொடங்கப்பட்டு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. குறிப்பாக இளைஞர்கள் மருந்தகங்களில் போதை மாத்திரைகள் மற்றும் வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி அதை பயன்படுத்தி குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக வந்த தகவலை அடுத்து மருந்தக உரிமையாளர்களுடன் காவல் துறை சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி அவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கூரியர் மற்றும் பார்சல் சேவை மூலமாக போதைப் பொருட்கள் அதிகளவில் கடத்தப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில் உள்ளூர், உள்நாட்டு மற்றும் சர்வதேச கூரியர் பார்சல் சேவை நிறுவன நிர்வாக அதிகாரிகளுடன் கூடுதல் ஆணையர்கள் தலைமையில் காவல் ஆணையர் அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கலந்தாய்வு கூட்டத்தில் கூரியர் மற்றும் பார்சல் நிறுவனத்திற்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

பார்சல்கள் பதிவு செய்யும்போது அனுப்புநர் மற்றும் பெறுநர் ஆகியோரின் முகவரி அடையாள ஆவணங்கள் சரிபார்த்த பின்னரே பார்சல்கள் பதிவு செய்யப்பட வேண்டும். உள்நாட்டு மற்றும் சர்வதேச பார்சல் அனுப்பும் போது அனுப்புனரின் புகைப்படத்துடன் கூடிய விபரங்களை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். மேலும் பதிவு செய்யப்பட்ட விவரங்களை இ-பதிவு மூலமாக குறைந்தபட்சம் மூன்று வருடங்களுக்கு பதிவு செய்து தேவையின் போது அந்த விவரங்களைக் காவல் துறைக்குத் வழங்கவேண்டுமென தெரிவித்துள்ளனர். கூரியர் மைய அலுவலகங்களில் ஸ்கேனர் கருவிகளை கட்டாயம் வைத்திருந்து பார்சல்களில் போதைப் பொருட்கள் போன்ற சட்டவிரோத பொருட்கள் உள்ளனவா என சரிபார்க்க வேண்டும்.

அனைத்து கூரியர் மற்றும் பார்சல் நிறுவனங்களில் உட்புறமும் வெளிப்புறமும் கட்டாயமாக சிசிடிவி பொறுத்திருக்க வேண்டும் எனவும் குறைந்தபட்சம் 30 நாட்கள் சிசிடிவி பதிவுகள் இருக்கும்படி பாதுகாக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் பார்சல்கள் டெலிவரி செய்யும் போது பெறுநர் பெயர் கொண்டவரே பார்சலை பெறுகிறாரா என சரிப்பார்த்து வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். விமானம், பேருந்து,ரயில் வழியாக பார்சல்கள் அனுப்பப்படுவதால் மிகவும் விழிப்புடன் செயல்படவேண்டும் எனவும், பார்சல்களில் சந்தேகம் படும்படியான பொருட்கள் மற்றும் சட்டவிரோத பொருட்கள் இருப்பதை கண்டறிந்தால் உடனே அருகில் உள்ள காவல் துறையினருக்கு தகவல் தகவல் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இந்த அறிவுரைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் எனவும் காவல்துறையின் அறிவுரைகளை மீறி சட்டவிரோத பொருட்களை அனுப்ப துணை புரியும் கூரியர் மற்றும் பார்சல் நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.