இந்தியா

இண்டெர்நெட் இல்லாத நேரத்தில் ஆன்லைனில் விண்ணப்பமா?: ஜம்மு-காஷ்மீர் குழப்பம்

இண்டெர்நெட் இல்லாத நேரத்தில் ஆன்லைனில் விண்ணப்பமா?: ஜம்மு-காஷ்மீர் குழப்பம்

webteam

ஜம்மு-காஷ்மீரில் இணையதள சேவை தடை செய்யப்பட்டுள்ள நிலையில் மாநில காவல்துறை கான்ஸ்டெபிள் பதவிக்கு ஆன்லைனில் விண்ணப்பக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி முதல் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. அத்துடன் அங்கு சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் காவல்துறை பணிக்கு ஆன்லைன் விண்ணப்பங்களை அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது பணிக்காக காத்திருந்தோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

ஜம்மு-காஷ்மீர் மாநில காவல்துறை கான்ஸ்டெபிள் பதவிக்கான விண்ணப்பங்களுக்கு அம்மாநில காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது . இது தொடர்பாக வெளியிட்டுள்ள ஆணையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட பெண்கள் கான்ஸ்டெபிள் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலி பணியிடங்கள் 2 பெண்கள் பட்டாலியன் காவல்துறை பிரிவில் உள்ளன. மொத்தமாக 1350 காலிபணியிடங்கள் உள்ளன. அவற்றில் ஜம்மு-காஷ்மீரை பூர்வீகமாக கொண்ட பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களுக்கு மட்டும் தற்போது ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என குறிப்பிட்டுள்ளது. 

ஜம்மு காஷ்மீர் அக்டோபர் 31 முதலே யூனியன் பிரதேசமாக கருதப்படும் என்பதால் அதுவரை அங்கு பூர்வீகமாக வசிப்பவர்களுக்கு சிறப்பு உரிமைகள் தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் தற்போது இணையதள சேவை தடை செய்யப்பட்டுள்ள நிலையில் ஆன்லைன் விண்ணப்பம் எப்படி சாத்தியம் என பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது.