இந்தியா

அர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன?!

அர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன?!

webteam

டிஆர்பி மோசடி வழக்கில் 'ரிபப்ளிக்' தொலைக்காட்சி சேனலின் தலைமை செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மற்றும் BARC அமைப்பின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி பார்த் தாஸ்குப்தா ஆகியோர் மீது சமீபத்தில் மும்பை காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. குற்றப்பத்திரிகை உடன், பார்த்தோ தாஸ்குப்தா - அர்னாப் கோஸ்வாமி இடையேயான 500 பக்கங்கள் கொண்ட வாட்ஸ்அப் உரையாடல்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதுதான் தற்போது இந்தியாவை அசைத்துப் பார்க்கும் செய்தியாக மாறியுள்ளது. காரணம், அந்த உரையாடல்களில் இடம்பெற்றுள்ள மத்திய அரசு தொடர்பான தகவல்கள்தான்.

இந்த உரையாடலில் ஓர் இடத்தில் 'மத்திய அரசின் எல்லா அமைச்சர்களும் நம் பக்கம் இருக்கிறார்கள், பிரதமர் அலுவலகம் கூட நமக்கு உதவும். இதன்மூலம் பிரச்னைக்கு தீர்வு காண முடியும்' என அர்னாப் கோஸ்வாமி, தாஸ்குப்தாவிடம் கூறியிருப்பதே அதற்கு ஒரு சான்று.

புல்வாமா தாக்குதலில் டிஆர்பி?!

மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் 2019 பிப்ரவரியில் புல்வாமா தாக்குதல் நடந்தது. இந்தத் தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்தத் தாக்குதல் தொடர்பாக தாஸ்குப்தாவிடம், ``20 நிமிடம் முன்னதாக காஷ்மீரில் இந்த ஆண்டின் மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதல் நடந்துள்ளது. ஒரே ஒரு சேனல்தான் களத்தில் இருந்தது" என்று கூறியிருக்கிறார் அர்னாப். மேலும், `` `This attack we have won like crazy' என, `வெறிபிடித்து காத்திருந்தவர்களுக்கான வாய்ப்பு, இந்தத் தாக்குதல்' என்று குறிப்பிட்டுள்ளார். தனது சேனல்களின் டிஆர்பி தொடர்பாக தாக்குதலில் மகிழ்ச்சி அடைந்துள்ளார் அர்னாப்.

பாலகோட் வான்வழித் தாக்குதல் குறித்து முன்பே அறிந்த அர்னாப்?!

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாலகோட்டில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்களை அழிக்கும் முயற்சியாக இந்திய விமானப்படை 26 பிப்ரவரி 2019 அன்று அங்கு தாக்குதல் நடத்தியது. இது நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர், பிப்ரவரி 23, 2019 அன்று, கோஸ்வாமி தாஸ்குப்தாவிடம் ``பெரிய சம்பவம் ஒன்று நடக்கும்'' என்று கூறியிருக்கிறார்.

அதற்கு தாவூத் பற்றி ஏதாவது சம்பவம் இருக்கிறதா என்று தாஸ்குப்தா கேட்க, ``இல்லை சார் பாகிஸ்தான். இந்த நேரத்தில் ஏதாவது பெரிய சம்பவம் நடக்க இருக்கிறது" என்று கோஸ்வாமி பதில் கொடுத்துள்ளார்.

தொடர்ந்து ``இது நல்லது. இந்த நேரத்தில் பெரிய மனிதருக்கு இது நல்லது. இதன்மூலம் அவர் தேர்தல்களில் ஜெயிப்பார், நார்மல் ஸ்ட்ரைக் அல்லது பெரிய சம்பவம் ஏதேனும் நடக்கப்போகிறதா?" என்று தாஸ்குப்தா கேட்க, ``நார்மல் ஸ்ட்ரைக்கை விட பெரியது. அதே நேரத்தில் காஷ்மீரில் ஏதோ பெரிய விஷயம் நடக்கும். மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்று அரசாங்கம் நம்புகிறது" எனக் கூறியுள்ளார் அர்னாப். பாலகோட் வான்வழித் தாக்குதலுக்கு சில நாட்களுக்கு முன்னர், புல்வாமா தாக்குதலுக்கு அரசாங்கம் பெரிய அளவில் பதிலடி கொடுக்கப்போகிறது என்று அர்னாப் கோஸ்வாமிக்கு முன்கூட்டியே தெரிந்திருக்கிறது என்று இந்த உரையாடல்கள் காண்பிப்பததாக பலரும் தற்போது குற்றம்சாட்டி வருகின்றனர்.

காஷ்மீர் செய்திகளை அர்னாப் எவ்வாறு பெற்றார் என்பதை அறிய என்எஸ்ஏ விரும்பியது!

பாலகோட் வான்வழித் தாக்குதல் சம்பவங்களை போலவே ஜம்மு காஷ்மீரில் 370வது பிரிவு நீக்கப்படுவது குறித்தும் முன்கூட்டியே அர்னாப் கோஸ்வாமிக்கு தெரிந்திருக்கிறது. 370வது பிரிவு நீக்கம் 2019 ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடந்தது. அதற்கு முன் ஆகஸ்ட் 2-ம் தேதி, 370 வது பிரிவு ரத்து செய்யப்படும் என்பது உண்மையா என்று தாஸ்குப்தா அர்னாப்பிடம் கேட்டுள்ளார். ``அடுத்த சில நாட்களில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பிரதமரை சந்திக்க இருக்கிறார்" என்று கூறியுள்ளார். அதுபோலவே இருவரும் சந்தித்து கொண்டனர்.

ஆகஸ்ட் 4, 2019 அன்று, கோஸ்வாமி தனது சேனல்கள் ஜம்மு - காஷ்மீர் நிலைமை குறித்த தகவல்களை பிரேக்கிங் செய்திகளாக கொடுத்ததாக தாஸ்குப்தாவிடம் இவ்வாறு கூறுகிறார். ``பாஸ், நாங்கள் 12:19, ஆஜ் தக் 12:57 மணிக்கு பிரேக்கிங் செய்தி கொடுத்தோம்" என்று கூறி ஸ்கிரீன் ஷாட் ஒன்றை அனுப்பியுள்ளார். மேலும் ஆகஸ்ட் 5, 2019 அன்று அதிகாலை 12:15 மணிக்கு, அவர் தாஸ்குப்தாவுக்கு குறுஞ்செய்திகளை அனுப்பியதாகக் கூறப்படுகிறது. மேலும் காஷ்மீரில் 144 தடை போடப்பட போகும் தகவல்களையும் அவர் முன்கூட்டியே தங்கள் சேனல் பிரேக் செய்தது என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து அந்த நாட்களில் காஷ்மீருக்கு அனுப்பப்பட்ட தனது சேனல் நிருபர்கள் ரிப்போர்ட்டிங் செய்ததை பேசியுள்ள அர்னாப், 370வது பிரிவு ரத்து தொடர்பான செய்திகளை ரிப்பப்ளிக் எவ்வாறு பெற்றது என்பதை அறிய என்எஸ்ஏ அஜித் தோவல் கூட விரும்பினார் என்று குறிப்பிட்டுள்ளார். ``நேற்று இரவு எனக்கு முதலில் அந்த பெரிய ஸ்டோரி தெரியவந்தது. மறுநாள் என்னை என்எஸ்ஏ அழைத்தது, எனக்கு எப்படி செய்தி கிடைத்தது என்று கேட்டார்கள். ஸ்ரீநகருக்கு புறப்படுவதற்கு முன்பு தோவல் என்னை சந்தித்தார்" என்று தாஸ்குப்தாவிடம் கூறியிருக்கிறார் அர்னாப்.

இப்படி, மத்திய பாஜக அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் அர்னாப் கோஸ்வாமிக்கு முன்கூட்டியே தெரிந்திருப்பதை இந்த 500 பக்க வாட்ஸ்அப் உரையாடல்கள் வெளிப்படுத்தியுள்ளன. இது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளதுடன், மத்திய அரசுக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதை விரிவாக விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் போர்க்கொடி தூக்கியுள்ளது.

இந்நிலையில், ``தற்போதைய அரசின் அதிகார மையங்களை அர்னாப் எளிதாக அணுக முடிவது, தன் ஊடகத்தை தவறாகப் பயன்படுத்தி அதிகார தரகராக செயல்படுவது இந்த உரையாடலில் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. சட்டத்தின் ஆட்சி நடக்கும் நாடுகளில் அர்னாப் இருந்தால் இந்நேரம் அவர் நீண்ட நாட்களுக்கு சிறையில் அடைக்கப்பட்டிருப்பார்" என்று பிரசாந்த் பூஷண் தன் ட்விட்டர் பக்கத்தில் சில வாட்ஸ்அப் உரையாடல்களின் ஸ்க்ரீன் ஷாட்களுடன் பகிர்ந்திருக்கிறார்.

- மலையரசு

தகவல் உறுதுணை: The Quint