மாதவி லதா ட்விட்டர்
இந்தியா

ஹிஜாப்பை அகற்றச் சொன்ன ஹைதராபாத் பாஜக வேட்பாளரின் செயலால் எழுந்த சர்ச்சை.. பாய்ந்த வழக்குப்பதிவு!

முஸ்லிம் பெண் வாக்காளர்களின் ஹிஜாப்பை அகற்றச் சொல்லி அடையாள அட்டையை சரிபார்த்த பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Prakash J

ஹைதராபாத் மக்களவைத் தொகுதிக்கு, இன்று (மே 13) வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தொகுதியில், பாஜக சார்பில் பரதநாட்டியக் கலைஞரான மாதவி லதா நிறுத்தப்பட்டுள்ளார். இந்த நிலையில், ஹைதராபாத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளை பாஜக வேட்பாளர் மாதவி லதா பார்வையிட்டார். அப்போது, முஸ்லிம் பெண்களின் ஹிஜாப்பை அகற்றச் சொல்லி வாக்காளர் அடையாள அட்டையை மாதவி லதா ஒப்பிட்டு சரிபார்த்தார். மேலும், தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம், வாக்காளர் பட்டியலில் முரண்பாடுகள் இருப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில், வாக்காளர்களை சுதந்திரமாக வாக்களிக்க விடாமலும், தேர்தல் நடத்தும் அரசு அலுவலர்களை மிரட்டும் நோக்கில் பேசுவதாகவும் மாதவி லதாவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், மாதவி லதா மீது வாக்காளர்களுக்கு இடையூறு செய்தல், அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் குறுக்கீடல், தவறான செய்தியை பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஹைதராபாத் மாவட்ட ஆட்சியர் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே தேர்தல் பிரசாரத்தின்போது மசூதியைப் பார்த்து அம்பு எய்வதுபோல் சைகை காட்டி, மாதவி லதா சர்ச்சையில் சிக்கியதுடன், அதுதொடர்பாகவும் அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: தெலங்கானா|2026க்கு பிறகு மெட்ரோ திட்டப்பணிகளில் இருந்துவிலகும் L&T! இயக்குநர் சொன்ன அதிர்ச்சி காரணம்