ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியதை எதிர்த்து சென்னையில் அத்துமீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக காங்கிரஸ் மாநில தலைவர் உட்பட 300 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வழக்கில் முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியதை கண்டிக்கும் விதமாக நேற்று சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ் அழகிரி தலைமையில் எம்.எல்.ஏ செல்வபெருந்தகை உட்பட 300க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். காங்கிரஸ் கட்சியினர் சாஸ்திரிபவனை நோக்கி முற்றுகையிடுவதற்காக கோஷத்துடன் வந்தபோது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
அப்போது காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உடனே போராட்டத்தில் ஈடுபட்ட கே.எஸ்.அழகிரி உட்பட 300 பேரை போலீசார் கைதுசெய்து தனியார் மண்டபத்தில் அடைத்து பின்னர் விடுவித்தனர். இந்த நிலையில் அத்துமீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி உட்பட 300 பேர் மீது நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். உரிய அனுமதியின்றி ஒன்று கூடுதல் உட்பட 2 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர்.