மிகிர் ஷா எக்ஸ் தளம்
இந்தியா

மும்பை கார் விபத்து|40முறை காதலிக்கு பறந்த போன் கால்; போலீஸ் வலையில் சிக்கிய அரசியல் பிரமுகரின் மகன்

மும்பையில் நடைபெற்ற கார் விபத்து சம்பவம் குறித்து போலீசாரின் விசாரணையில் புதிய தகவல்கள் வெளிவந்து உள்ளன.

Prakash J

மும்பையில் கடந்த ஜூலை 7ஆம் தேதி விடியற்காலை அதிவேகமாகமாக வந்த கார் மோதி, இழுத்துச்செல்லப்பட்டதில் நக்வா என்ற பெண் பரிதாபாக உயிரிழந்தார். பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பத்தில், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணியின் சிவசேனா கட்சியின் உள்ளூர் தலைவரான ராஜேஷ் ஷா கைது செய்யப்பட்டார். இவர் பெயரில் இருந்த பிஎம்டபிள்யூ கார்தான் விபத்துக்குக் காரணம்.

பின்னர் இந்த விபத்தில் சம்பந்தப்பட்ட கார் ஓட்டுநர் ராஜ்ரிஷி பிதாவத்தையும் போலீசார் வழியில் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். ஆனால், விபத்தை ஏற்படுத்திய ராஜேஷ் ஷாவின் மகன் மிகிர் ஷா தலைமறைவானார். மிகிர் ஷா தனது நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்தியிருந்ததாகவும், அந்தப் போதையில்தான் அவர் காரை டிரைவரிடம் வாங்கி அதிவேகமாக ஓட்டிச் சென்றதாகவும், மதுவுக்காக அவர் ரூ.18,730 கட்டணமாகச் செலுத்தியதாகவும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, மிகிர் ஷா மது அருந்தியதாகக் கூறப்பட்ட மதுபான விடுதி முறைகேடுகள் நடைபெற்றது தொடர்பாக அம்மதுபான விடுதி மீதும் போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

இந்த விபத்துக்குப் பிறகு ஏக்நாத் ஷிண்டேவை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்திருந்தன. இதற்குப் பதிலளித்த ஷிண்டே, “சட்டம் அனைவருக்கும் சமம். இதில் யாரையும் காப்பாற்ற முடியாது. அரசு ஒவ்வொரு வழக்கையும் ஒரேமாதிரியாகப் பார்க்கிறது. எல்லாம் சட்டப்படி நடக்கும். இந்த வழக்கில், கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறையிடம் பேசியுள்ளேன்” எனத் தெரிவித்துள்ள அவர், ராஜேஷ் ஷாவை கட்சியிலிருந்து நீக்கவும் அதிரடி உத்தரவிட்டார்.

இதையும் படிக்க: பெரு|மலையேறிய அமெரிக்க வீரர் பனியில் சிக்கி மாயம்; மம்மி ஆக உறைந்த உடல் 22 ஆண்டுகளுக்கு பிறகு மீட்பு

இந்த நிலையில், தலைமறைவான மிகிர் ஷா போலீசாரால், நேற்று கைது செய்யப்பட்டார். இவர் போலீசார் சிக்கியது குறித்து சில தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில், “விபத்துக்குப் பிறகு மிகிர் ஷா ஓட்டுநர் இருக்கையில் இருந்து இறங்கி, அந்த இடத்தில் ராஜ்ரிஷி பிதாவத்தை அமரச் செய்துள்ளார். அதன்பிறகு, காரை ஓட்டிய ராஜ்ரிஷி பின்னோக்கி எடுத்துவந்து கலா நகர் அருகே நிறுத்தியுள்ளார். அப்போது காரில் இருந்த நம்பர் பிளேட்டை மாற்றியுள்ளனர். அந்தச் சமயத்தில் மிகிர் ஷா அவருடைய காதலிக்கு 40 முறை போன் செய்துள்ளார்.

அப்போது, இந்த விபத்து குறித்து தெரிவித்தார்.

இதையடுத்து காரை அங்கேயே விட்டுவிட்டு ஓட்டுநர் தப்பியோடியுள்ளார். ஆனால் காதலி தன் வீட்டுக்கு அழைத்ததை அடுத்து, மிகிர் ஷாவோ அங்கிருந்து ஆட்டோ பிடித்து புறப்பட்டுச் சென்றுள்ளார். காதலியின் வீடு இருந்த கோரேகானுக்குச் சென்ற மிகிர் ஷா, அங்கு இரண்டு மணி நேரம் தங்கியுள்ளார். அப்போது காதலி, மிகிர் ஷாவின் சகோதரிக்கு போன் செய்து அனைத்து விவரத்தையும் கூறியுள்ளார்.

இதையும் படிக்க: கடைசிப்போட்டி.. ஓய்வுபெறும் ஜேம்ஸ் ஆண்டர்சனை கௌரவித்த இங்கிலாந்து அணி! விண்ணை பிளந்த கரகோஷம்!

இதைக் கேட்டு அங்கு சென்ற மிகிர் ஷாவின் சகோதரி, அவரை, போரிவலியில் உள்ள வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்து, மிகிர் ஷாவின் தாயார் மீனா, அவருடைய சகோதரிகளான பூஜா, கிஞ்சல் மற்றும் நண்பர் அவ்தீப் ஆகியோருடன் மிகிர் ஷா மும்பையிலிருந்து 70 கிமீ தொலைவில் உள்ள ஷாபூரில் உள்ள ஒரு ரிசார்ட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் ஜூலை 8ஆம் தேதி இரவு, விராரில் உள்ள வீட்டிற்குச் சென்றனர்.

அப்போது, நண்பர் அவ்தீப் தனது போனை ஆன் செய்ததால், அவர்கள் இர்ந்த இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மிகிர் ஷா கைது செய்யப்பட்டார். இதையடுத்து இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவருக்கு ஜூலை 16 வரை போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது. மிகிர் ஷாவுக்கு தஞ்சமடைய அனுமதி வழங்கியதால், அவரது காதலியும் இந்த வழக்கில் சிக்கியுள்ளார். இதனால் அவர் இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்கப்படலாம்” என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க:ஹிஜாப் அணிய மறுத்த பெண்கள்.. துருக்கியின் விமான நிறுவன அலுவலகத்தை மூடிய ஈரான்!