சித்தராமையா எக்ஸ் தளம்
இந்தியா

”எனது மனைவிக்கு சட்டவிரோதமாக நிலம் ஒதுக்கப்பட்டதா? நடந்தது இதுதான்” - முதல்வர் சித்தராமையா விளக்கம்

PT WEB

ஓசூர் செய்தியாளர்: ம.ஜெகன்நாத்

கர்நாடக மாநிலம் மைசூருவில் சட்டவிரோதமாக மாற்று நிலம் ஒதுக்கப்பட்ட குற்றச்சாட்டில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, அவரது மனைவி பார்வதி உள்பட 11 பேர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விஜயநகர் காவல் நிலையத்தில் சமூக ஆர்வலர் சினேகமாயி கிருஷ்ணா அளித்த புகாரில் பார்வதியின் அண்ணன் மல்லிகார்ஜுன சுவாமி தேவராஜ், துணை ஆணையர், வட்டாட்சியர், சார்பதிவாளர் உள்ளிட்டோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளது.

இந்த புகாரின் நகலை மாநில ஆளுநர், தலைமைச் செயலாளர் மற்றும் வருவாய்த்துறை முதன்மைச் செயலாளர் உள்ளிட்டோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மைசூருவில் மாற்று நிலம் ஒதுக்குவதில் பெரிய அளவிலான ஊழலில் மைசூரு நகர வளா்ச்சி ஆணையம் (முடா) ஈடுபட்டுள்ளதாக சமீபத்தில் செய்தி வெளியாகி இருந்தது. முதல்வா் சித்தராமையாவின் மனைவி பாா்வதிக்கும் மாற்று நிலம் ஒதுக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதன்மூலம் 3,800 கோடி ஊழல் நடைபெற்றதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், புகார் குறித்து விசாரணை நடத்தி 15 நாட்களுக்குள் அறிக்கை அளிக்க உத்தரவிட்டு, நகா்ப்புற ஆணையங்களின் ஆணையா் ஆா்.வெங்கடாசலபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டு குறித்து கர்நாடக எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக், “இந்த விவகாரத்தை சிபிஐ அல்லது உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி விசாரித்திருக்க வேண்டும். ஆனால், ஊழலை மூடிமறைக்க 2 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்திருக்கிறாா்கள். 50:50 விகிதத்தில் நிலம் ஒதுக்குவதற்கு யாா் அனுமதி அளித்தது? சொகுசான பகுதியில் மாற்றுநிலம் ஒதுக்க பரிந்துரைத்தது யாா்” என்று குற்றம்சாட்டி கேள்வி எழுப்பியிருந்தாா்.

இதையும் படிக்க:பெரு|மலையேறிய அமெரிக்க வீரர் பனியில் சிக்கி மாயம்; மம்மி ஆக உறைந்த உடல் 22 ஆண்டுகளுக்கு பிறகு மீட்பு

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள சித்தராமையா, ”எனது மனைவியின் அண்ணன் மல்லிகாா்ஜுனா, 1996இல் மைசூருவில் 3 ஏக்கா் 36 சென்ட் நிலம் வாங்கினாா். அந்த நிலத்தை தனது சகோதரியான பாா்வதிக்கு (எனது மனைவி) அன்பளிப்பாக வழங்கினாா். கையகப்படுத்தும் நிலத்திற்கு மாற்றுநிலம் வழங்குவதற்காக 50:50 சதவிகிதத் திட்டத்தை முந்தைய பாஜக அரசு அமல்படுத்தியது. எனது மனைவி பாா்வதிக்குச் சொந்தமான 3 ஏக்கா் 36 சென்ட் நிலத்தை மைசூரு நகர வளா்ச்சி ஆணையம் முறையாகக் கையகப்படுத்தாமல், அந்த நிலத்தில் மனைகளை உருவாக்கி விற்றுவிட்டது.

இதை, மைசூரு நகர வளா்ச்சி ஆணையம் தெரிந்து செய்ததா அல்லது தெரியாமல் செய்ததா என்பது எனக்குத் தெரியாது. எனது மனைவியின் நிலத்தில் மனைகள் அமைத்து, விற்றுவிட்டதால், அவரது சொத்து பறிபோய்விட்டது. இது குறித்து மைசூரு நகர வளா்ச்சி ஆணையத்திடம் கேட்டோம். அதற்கு ஈடாக எங்கள் நிலத்திற்கு நிகரான அளவில் வெவ்வேறு பகுதிகளில் மைசூரு நகர வளா்ச்சி ஆணையம் மாற்றுநிலத்தை வழங்கியது. இதில் என்ன தவறு இருக்கிறது” எனப் பதிலளித்துள்ளார்.

இதையும் படிக்க:சூடுபறக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் | ஜோ பைடனுக்கு சவால் விட்ட டொனால்டு ட்ரம்ப்!