இஸ்லாமிய மதத்தினர் போல் இந்து மதத்தினரும் தங்கள் பிள்ளைகளுக்கு இளம் வயதிலேயே திருமணம் செய்ய வேண்டும் என்று பேசிய பத்ருதீன் அஜ்மல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சியினரும் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
அசாம் எம்.பி.யும், அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏஐயுடிஎப்) கட்சி தலைவருமான பத்ருதீன் அஜ்மல் கடந்த வெள்ளிக்கிழமை செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்தார். அந்த பேட்டியில் அஜ்மல் கூறுகையில், “இந்து மதத்தினர் இஸ்லாமிய மதத்தினரின் ஃபார்முலாவை பின்பற்றி அவர்களின் பிள்ளைகளுக்கு இளம் வயதிலேயே திருமணம் செய்துவைக்க வேண்டும்” என்றார்.
பத்ருதீன் அஜ்மலின் கருத்துக்கு பல்வேறு தரப்பில் கண்டனம் எழுந்த நிலையில் அவர் தனது கருத்துக்கு மன்னிப்பு கோரினார். இருப்பினும் பத்ருதீன் அஜ்மல் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு தரப்பினரும் போலீசில் புகார் அளித்து வருகின்றனர். அசாம் மாநில காங்கிரஸ் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான தேபப்ரதா சைகியா, அஜ்மலின் கருத்துக்கள் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாக குற்றஞ்சாட்டி போலீசில் புகார் அளித்துள்ளார். அதேபோல் அஸ்ஸாம் ஜாதிய பரிஷத் (ஏஜேபி) கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சார்பிலும் பல்வேறு காவல் நிலையங்களில் அஜ்மல் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.