கைது செய்யப்பட்ட  PT WEB
இந்தியா

வீடு கட்ட கடன் வாங்கி தருவதாகக் கூறி 22 சவரன் தங்க நகைகளை அபேஸ் செய்த பெண் ; சுற்றி வளைத்த போலீஸ்!

புதுச்சேரியில் உடன் பணிபுரியும் பெண் ஊழியரிடம் வீடு கட்ட கடன் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி, 1லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

webteam

புதுச்சேரி முதலியார்பேட்டை திரு.வி.க நகரைச் சேர்ந்தவர் கருநேந்திரன். இவருடைய மனைவி ரஞ்சினி. இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் ஹவுஸ்கீப்பிங் வேலை செய்து வருகிறார். அதே நிறுவனத்தில் முதலியார்பேட்டை பாரதிதாசன் நகரில் வசிக்கும் சத்யவதி (36) என்பவரும் ஹவுஸ் கீப்பிங் வேலை பார்த்து வருகிறார்.இதனால் இவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

கடன் வாங்கித் தருவதாக கூறி மோசடி!

இந்தநிலையில், ரஞ்சினி தான் வீடு கட்ட கடன் உதவி தேவைப்படுவதாக சத்யவதியிடம் கூறியுள்ளார். அதற்கு சத்யவதி, தான் சுய உதவிக்குழுவில் இருப்பதாகவும், வீடு கட்ட ரூ.22 லட்சம் வாங்கி தருவதாகக் கூறியுள்ளார். இதனை நம்பிய, ரஞ்சனி அவரிடம் கடன் வாங்கி தருமாறு கேட்டுள்ளார். அப்போது சத்தியவதி தனக்கு தனியார் செல்போன் நிறுவனத்தில் கலெக்‌ஷன் பணியில் இருக்கும் செந்தில்குமார் என்பவரைத் தெரியும் எனக் கூறி அவரை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

1 லட்சம் பணம் தங்க நகை மோசடி

பின்னர் செந்தில்குமாருடன் சேர்ந்து ரஞ்சனியிடம் சில ஆவணங்களைக் காட்டி, கடன் வாங்க முன்பணம் கட்ட வேண்டும் எனக் கூறியுள்ளனர். அதனை நம்பிய ரஞ்சனி கடன் ஆவணங்களுக்காக முதற்கட்டமாக ரூ.1 லட்சத்து 25 ஆயிரமும், பின்னர் சிறிது சிறிதாக 22 சவரன் தங்க நகைகள் இருசக்கர வாகனம் ஆகியவற்றை கொடுத்துள்ளார் .

இதனையடுத்து, நீண்ட நாட்களைக் கடந்தும் கடன் கிடைக்காததால் ரஞ்சினி, சத்தியவதியை நேரில் சென்றுகேட்டுள்ளார். அப்போது சத்தியவதியும், செந்தில்குமாரும் சேர்ந்து ரஞ்சனியை மிரட்டியுள்ளனர்.

தலைமறைவான இளைஞர்

இது குறித்து முதலியார்பேட்டை காவல்நிலையத்தில் ரஞ்சினி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சத்தியவதியை கைது செய்தனர்.

பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், சத்தியவதிக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் இருப்பதும் , அவரது கணவர் 5 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து சென்றதும், சொகுசு வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு செந்தில்குமாருடன் திருமணத்திற்கு மீறிய உறவை ஏற்படுத்திக் கொண்டு நகை, பணம் ஆகியவற்றை பறித்துள்ளது தெரியவந்துள்ளது. அவரிடம் இருந்து, 10 சவரன் தங்க நகைகளைப் பறிமுதல் செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய, செந்தில்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.