இந்தியா

TRP முறைகேடு: BARC அமைப்பின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ரோமில் ராம்கரியா கைது!

TRP முறைகேடு: BARC அமைப்பின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ரோமில் ராம்கரியா கைது!

Sinekadhara

தொலைக்காட்சி பார்வையாளர் எண்ணிக்கை மதிப்பீடு முறைகேடு வழக்கில் BARC அமைப்பின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ரோமில் ராம்கரியாவை மும்பை காவல்துறை கைது செய்துள்ளது.

தொலைக்காட்சி பார்வையாளர்களை கணக்கிடும் TRP நடைமுறையில் சில தொலைக்காட்சி நிறுவனங்கள் முறைகேடு செய்து ஆதாயம் பெற்றதாக மும்பை காவல் துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. பார்வையாளர் கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்ட வீட்டினருக்கு பணம் தந்து குறிப்பிட்ட சேனலை மட்டும் ஓட வைத்து பார்வையாளர் மதிப்பீட்டு புள்ளிகளை உயர்த்தியதே இந்த முறைகேட்டின் சாரம்சமாகும்.

இவ்வழக்கில் ஏற்கெனவே ரிபப்ளிக் தொலைக்காட்சி தலைமை செயல் அதிகாரி விகாஸ் கஞ்ச்சந்தானி கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் தொலைக்காட்சி பார்வையாளர் மதிப்பீட்டு கணிப்பு நிறுவனமான BARC-இன் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ரோமில் ராம்கரியாவுக்கு இம்முறைகேட்டில் தொடர்புள்ளதாக கூறி கைது செய்துள்ளனர்.

இவ்வழக்கில் மும்பை காவல் துறையின் சிறப்பு புலனாய்வுக் குழுவால் கைது செய்யப்படும் 14ஆவது நபர் ரோமில் ராம்கரியா ஆவார். எனினும் இவ்வழக்கில் தங்கள் மீதான குற்றச்சாட்டை ரிபப்ளிக் தொலைக்காட்சி மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.