பெங்களூருவிலிருந்து சட்டவிரோதமான முறையில் வங்கதேசம் செல்ல முயன்ற 31 வங்கதேசிகள் அசாம் தலைநகர் கவுகாத்தியில நேற்று(அக்டோபர் 15) கைது செய்யப்பட்டுள்ளனர். பெங்களூரு விரைவு ரயில் மூலம் கவுகாத்தி சென்ற அந்த வங்கதேசிகள், அகர்தலா(திரிபுரா) செல்ல கஞ்சென்ஜங்கா விரைவு ரயிலுக்கு காத்திருந்த போது இவர்களை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.
“ரயில்வே நிலையத்திலிருந்த இவர்கள் மீது சந்தேகம் எழுந்த நிலையில், விசாரணை நடத்தினோம். இவர்களில் பெரும்பாலானோரிடம் எந்த முறையான ஆவணங்களும் இல்லை. தாங்கள் வங்கதேசத்தில் இருந்து வந்தவர்கள் என்பதையும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்” எனத் தெரிவித்திருக்கிறார் ரயில்வே போலீஸ் கண்காணிப்பாளர் ஹேமந்த தாஸ். இவர்கள் பெங்களூருவில் கூலிகளாகவும் கட்டிட வேலைகளிலும் ஈடுபட்டு வந்துள்ளனர். “திரிபுரா வழியாக மீண்டும் தாய் நாட்டுக்கு செல்ல இவர்கள் நினைத்திருக்கின்றனர். இவர்களில் 10 பேர் ஆண்கள், 8 பேர் பெண்கள், 13 பேர் குழந்தைகள்” என கண்காணிப்பாளர் குறிப்பிட்டிருக்கின்றார்.
தற்போது கைது செய்யப்பட்ட 31 வங்கதேசிகளும் நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை முறையான வழியில் வங்கதேசத்துக்கு நாடுகடத்துவதற்கான முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். வங்கதேசத்தில் நிலவும் வறுமை நிலைக் காரணமாக தொடர்ச்சியாக வட கிழக்கு மாநிலங்கள் வழியாக இந்தியாவுக்குள் வங்கதேசிகள் நுழைவது பல ஆண்டுகளாக நீடித்து வரும் சிக்கலாக இருக்கின்றது. ‘சட்டவிரோத குடியேறிகள்’ என்ற மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்த இது, அசாமில் ‘தேசிய குடிமக்கள் பதிவேடு’ என்ற நடைமுறையை கொண்டு வரவும் காரணமாக அமைந்தது. மார்ச் 1971க்கு பின் அசாமில் நுழைந்தவர்கள் சட்டவிரோத குடியேறிகள் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்ட பதிவேட்டில் இன்று அசாமில் உள்ள 40 லட்சம் பேரின் பெயர்கள் விடுப்பட்டுள்ளன. இவர்கள் சட்டவிரோத குடியேறிகள் என்ற உறுதியான முடிவுக்கு அசாம் அரசு வரும் பட்சத்தில், பெரும் எண்ணிக்கையிலான மக்கள் நாடுகடத்தப்படுவதற்கான வாய்ப்புகளும் உண்டு.
வங்கதேசத்துடன் பல இந்திய மாநிலங்கள் சிக்கலான எல்லைப்பகுதியை பகிர்ந்து கொண்டிருக்கின்றது. இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே உள்ள 4,156 கிலோ மீட்டர்களில் அசாம் (262 கி.மீ.), மேற்கு வங்காளம் (2,217 கி.மீ.), திரிபுரா (856 கி.மீ.), மிசோரம் (180 கி.மீ.), மேகாலயா (443 கி.மீ.) கொண்டிருக்கின்றது. இவ்வாறான சூழலில், சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழையும் வங்கதேசிகளை பிடிப்பதற்கான கண்காணிப்பு, அசாம் மட்டுமின்றி இந்தியாவின் பல பகுதிகளிலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.