caa twitter
இந்தியா

குடியுரிமை சட்ட திருத்தம் அமல்: நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு...!

குடியுரிமை சட்ட திருத்தம் நேற்று முதல் அமல் படுத்தப்பட்டுள்ள நிலையில், அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் இருப்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கணபதி சுப்ரமணியம்

நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) நேற்று (மார்ச் 11) அமல்படுத்தப்பட்டது. இதுதொடர்பான அறிவிப்பையும் அரசிதழில் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியிலும் 2020 ஆம் ஆண்டு ஆரம்பத்திலும், குடியுரிமை சட்ட திருத்த போராட்டம் வன்முறை வழியில் சென்றதால் இம்முறை அப்படியேதும் நிகழாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

CAA Protest

முன்னெச்சரிக்கையாக தலைநகர் டெல்லி உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்லி ஷாஹீன் பாக் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தினர். வடகிழக்கு டெல்லியின் பல்வேறு பகுதிகளிலும் காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் உள்ளனர்.

போலவே உத்தரப்பிரதேசம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களிலும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தலாம் எனவும் உளவுத்துறை தகவல் அளித்துள்ளது. ஆகவே பாதிப்பு ஏற்படக் கூடிய மாநிலங்களில் காவல்துறையினர் முன்னெச்சரிக்கையோடு இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு வன்முறை வெடித்த டெல்லியின் ஜாமியா உள்ளிட்ட பகுதிகளில் உளவுத் துறையினரும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்