உ.பி. - புதரில் வீசப்பட்ட குழந்தையை தத்தெடுத்த அதிகாரி முகநூல்
இந்தியா

புதரில் கிடந்த பிஞ்சுக்குழந்தை.. மகளாய் தத்தெடுக்கும் காவல் அதிகாரி! உ.பி.யில் நெகிழ்ச்சி சம்பவம்

உத்தரப்பிரதேசத்தில் பெற்றோரால் கைவிடப்பட்டு புதரில் கிடந்த புதிதாக பிறந்த பச்சிளம் குழந்தையை மீட்ட காவல் துறை அதிகாரி ஒருவர், அக்குழந்தையை தனது மகளாக தத்தெடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

உத்தரப்பிரதேசத்தில் பெற்றோரால் கைவிடப்பட்டு புதரில் கிடந்த, புதிதாக பிறந்த பச்சிளம் குழந்தையை மீட்ட காவல் துறை அதிகாரி ஒருவர், அக்குழந்தையை தனது மகளாக தத்தெடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் உள்ள புதர் ஒன்றிலிருந்து குழந்தையொன்று அழும் சத்தம் கேட்டுள்ளது. அச்சத்தத்தை கேட்ட அவ்வழியில் சென்ற சிலர், அருகே சென்று பார்த்தபோது, பிறந்த சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று மோசமான நிலையில் அங்கே இருந்துள்ளது.

புதரில் கிடந்த குழந்தை

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அம்மக்கள், இதுகுறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட பகுதியின் காவலர்களுக்கு தகவல் கொடுத்துள்னர். சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பேந்திர சிங் தலைமையிலான அதிகாரிகள், உடனடியாக சம்பவம் இடத்திற்கு விரைந்து குழந்தையை மீட்டுள்ளளனர். பிறகு, குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற சப் இன்ஸ்பெக்டர் புஷ்பேந்திர சிங், குழந்தைக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை வழங்கியுள்ளார்.

இதனையடுத்து, குழந்தையின் பெற்றோர் யார் என்று தீவிர விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஆனால், எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை. குழந்தையை வாங்கவும் யாரும் முன்வரவில்லை.

இந்தநிலையில், சப்- இன்ஸ்பெக்டர் புஷ்பேந்திர சிங் மற்றும் அவரது மனைவி ராஷி இருவருக்கும் திருமணமாகி 6 வருடங்களாக குழந்தை இல்லையென்பதால், இவர்கள் இருவருமே, குழந்தையை தத்தெடுத்து வளர்க்க முடிவு செய்துள்ளனர்.

கடந்த 2018 ஆம் ஆண்டு புஷ்பேந்திர் - ராஷி இருவருக்கும் திருமணமான நிலையில் குழந்தை பிறக்காமல் இருந்துள்ளது. இந்த நவராத்திரி பண்டிகையின் போது இக்குழந்தையின் வருகையால் கடவுளே தங்களுக்கு குழந்தையை வழங்கியுள்ளாரென கருதுவதாக இருவரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மேலும் குழந்தையை தங்களின் குடும்ப உறுப்பினராக மாற்ற தேவையான சட்டப்பூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

தத்தெடுத்துக்கொண்ட தம்பதி

இதுதொடர்பான செய்திகள் வெளியான நிலையில், ‘பெற்றெடுத்தெடுத்த குழந்தையை குப்பை மேடுகளிலும், புதர்களிலும் விட்டுச் செல்லும் பெற்றோர்களுக்கு குழந்தையின் அருமை தெரிவதில்லை. குழந்தை இல்லாமல் தவிப்பவர்களுக்குதான் அதன் வலியும் வேதனையும் தெரியும்! அதனாலேயே ஒரு குழந்தைக்கு வாழ்க்கை கொடுத்துள்ளார் அந்த காவல் அதிகாரி’ என்று நெகிழ்கின்றனர் நெட்டிசன்கள்.