1877ஆம் ஆண்டில் ஒருங்கிணைந்த இந்தியாவின் பஞ்சாப் மாகாணம் சிலாகோட்டில் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) பிறந்தவர் முகமது இக்பால். ‘சாரே ஜஹான் ஸே அச்சா’ என்னும் புகழ்பெற்ற பாடலை இயற்றியதற்காக இவர் அறியப்பட்டவர். பாகிஸ்தான் என்னும் நாட்டை தோற்றுவிக்க வேண்டும் என்று முதன்முதலில் குரலெழுப்பியவர் கவிஞர் இக்பால் தான்.
கவிதைகள் தவிர அரசியல், பொருளாதாரம், வரலாறு, மெய்யியல், சமயம் ஆகிய துறைகளில் இவர் எழுதிய நூல்கள் மிகவும் பிரபலமானவை. அந்த வகையில் இவரைப்பற்றிய பாடம், 'நவீன இந்திய அரசியல் சிந்தனை' (Modern Indian Political Thought) என்ற தலைப்பிலான அத்தியாயத்தில் டெல்லி பல்கலைக்கழகத்தின் பி.ஏ. அரசியல் அறிவியல் பாடப்பிரிவில் 6-வது செமஸ்டரில் இடம்பெற்றிருந்தது.
அந்தப் பாடத்தை, அரசியல் அறிவியல் பாடத்திட்டத்தில் இருந்து நீக்குவதற்கான தீர்மானத்தை டெல்லி பல்கலைக்கழகத்தின் கல்விக் கவுன்சில் வெள்ளிக்கிழமை இயற்றியிருக்கிறது. இத்தகவலை டெல்லி பல்கலைக்கழகத்தின் கல்விக் கவுன்சில் உறுப்பினர்களும் தற்போது உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த தீர்மானம் பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குழுவிடம் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கவிஞர் இக்பாலின் பாடத்தை பாடத்திட்டத்தில் இருந்து நீக்குவதற்கான முடிவை ஏ.பி.வி.பி. அமைப்பு வரவேற்றுள்ளது. 'இந்தியப் பிரிவினைக்கு காரணமானவர் இக்பால்' என்று அந்த அமைப்பு விமர்சித்துள்ளது.