போக்சோ வழக்கு புதிய தலைமுறை
இந்தியா

போக்சோ வழக்குகளில் உ.பி முதலிடம்.. தமிழ்நாட்டிற்கு எந்த இடம்? மத்திய அரசு கொடுத்த விவரம்!

போக்சோ வழக்குகளுக்கான பிரத்யேக நீதிமன்றங்களில் இதுவரை தொடரப்பட்ட வழக்குகள் எவ்வளவு, அவற்றில் தீர்வு காணப்பட்டவை எவ்வளவு, நிலுவையில் உள்ளவை எவ்வளவு என்பது குறித்து நாடாளுமன்றத்தில் அரசு அளித்த பதில்களை காணலாம்.

PT WEB

போக்சோ வழக்குகளுக்கான பிரத்யேக நீதிமன்றங்களில் இதுவரை தொடரப்பட்ட வழக்குகள் எவ்வளவு, அவற்றில் தீர்வு காணப்பட்டவை எவ்வளவு, நிலுவையில் உள்ளவை எவ்வளவு என்பது குறித்து நாடாளுமன்றத்தில் அரசு அளித்த பதில்களை காணலாம்.

சிறார் தொடர்புள்ள பாலியல் வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காண போக்சோ விரைவு நீதிமன்றங்கள், பிரத்யேக போக்சோ நீதிமன்றங்கள் நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ளன. இந்நீதிமன்றங்களில் நாடு முழுக்க 2 லட்சத்து 73 ஆயிரத்து 913 போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில் அதில் ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 968 வழக்குகளில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், இது குறித்து அரசு தெரிவிக்கையில், “ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 945 வழக்குகள் நிலுவையில் உள்ளன. மாநிலவரியாக பார்த்தால் உத்தரப்பிரதேசத்தில் அதிகபட்சமாக 80 ஆயிரத்து 567 வழக்குகள் பதிவான நிலையில் அவற்றில் 28 ஆயிரத்து 283க்கு தீர்வு காணப்பட்டன. 52ஆயிரத்து 184 நிலுவையில் உள்ளன.

மத்திய பிரதேசத்தில் 27 ஆயிரத்து 763 வழக்குகள் பதிவான நிலையில் 20 ஆயிரத்து 92 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. 7 ஆயிரத்து 671 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதிக போக்சோ வழக்குகள் பதிவானதில் பீகார் மாநிலம் 3ஆம் இடத்தில் உள்ளது. இங்கு 27 ஆயிரத்து 655 வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில் 9 ஆயிரத்து 939 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

17 ஆயிரத்து 716 வழக்குகள் நிலுவையில் உள்ளன. தமிழ்நாட்டை பொறுத்தவரை 10 ஆயிரத்து 668 போக்சோ வழக்குகளுடன் 9ஆவது இடத்தில் உள்ளது. இங்கு 6 ஆயிரத்து 228 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ள நிலையில் 4 ஆயிரத்து 440 வழக்குகள் நிலுவையில் உள்ளன.” என்று தெரிவித்துள்ளது.