இந்தியா

‘ஜாமீன் கொடுத்தால் பிடிக்க முடியாது’ - நிரவ் மோடியை சிறைக்கு அனுப்பிய லண்டன் நீதிமன்றம்

rajakannan

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் லண்டனில் கைது செய்யப்பட்ட வைர வியாபாரி நிரவ் மோடிக்கு மார்ச் 29 வரை காவலில் வைக்க வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மும்பை வைர வியாபாரி நிரவ் மோடி, அவரது நெருங்கிய உறவினர் மெகுல் சோக்சி ஆகியோர் பஞ்சாப் நேஷனல் வங்கி மூலம் ரூ.13 ஆயிரம் கோடி சட்ட விரோத பணப் பரிமாற்ற மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக நிரவ் மோடி உள்ளிட்டவர்கள் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவு இயக்குநரகம் வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது.

நிரவ் மோடிக்கு சொந்தமான 3000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. அவரது பாஸ்போர்ட்டும் முடக்கப்பட்டது. ஆனால், இந்த மோசடி வெளியுலகுக்கு தெரிய வருவதற்கு முன்பாகவே வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்ட நிரவ் மோடி, தனது இடத்தை அடிக்கடி மாற்றி வருவதாக கூறப்பட்டது. நிரவ் மோடியை கைது‌ செய்ய மத்திய அரசு இன்டர்போல் மூலம் ரெட் கார்னர் நோ‌ட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

இதனிடையே, லண்டனுக்கு ‌தப்பிச் சென்ற நிரவ் மோடி, அங்கிருந்த‌படி மீண்டும் வைர வியாபாரத்தை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியானது. ‌இங்கிலாந்தி‌ன் டெலிகிராப் பத்திரிகை இத்தகவலை வெளியிட்டிருந்தது. இதனால் இந்தியாவின் அமலாக்கப்பிரிவு இயக்குநரகம் லண்டன் நீதிமன்றத்தில் நிரவ் மோடியை இந்தியாவிடம் ஓப்படைக்க கோரி மனுத்தாக்கல் செய்தது. இந்த வழக்கில் லண்டன் நீதிமன்றம் நிரவ் மோடியை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பித்திருந்தது. 

இதனையடுத்து நிரவ் மோடி லண்டனில் இன்று கைது செய்யப்பட்டார். அதனையடுத்து, லண்டனில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, நிரவ் மோடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஜாமீன் அளித்தால் மீண்டும் சரணடையமாட்டார் என்று நீதிமன்றம் தெரிவித்தது.

அதன்பிறகு, அடுத்தக்கட்ட விசாரணை நடைபெறும் மார்ச் 29 வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பின்னர், அவர் வாண்ட்வொர்த் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.