இந்தியா

உலகின் மிக உயரமான படேல் சிலை குஜராத்தில் இன்று திறப்பு

உலகின் மிக உயரமான படேல் சிலை குஜராத்தில் இன்று திறப்பு

Rasus

உலகின் மிக உயரமான சிலையாக உருவாக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேலின் சிலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

வல்லபாய் படேலின் பிறந்தநாளை ஒட்டி அவரது சிலை குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படவுள்ளது. ஒற்றுமை சிலை என பெயரிடப்பட்டுள்ள இந்த சிலையை நாட்டுக்கு அர்ப்பணிப்பதன் அடையாளமாக பிரதமர் மண்ணையும் நர்மதா ஆற்று நீரையும் ஒரு கலசத்தில் ஊற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து அந்த சிலைக்கு ஒரு மெய்நிகர் அபிஷேகம் செய்வதற்கான விசையை பிரதமர் அழுத்துவார் என்றும் கூறப்பட்டுள்ளது. 

இதன் பின்னர் ஒற்றுமை சுவருக்கு வரும் பிரதமர் அதை திறந்து வைப்பார். அதைத்தொடர்ந்து சிலையின் காலடியில் பிரதமர் சிறப்பு பிரார்த்தனை செய்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகம் மற்றும் பார்வையாளர் அரங்கத்தை பிரதமர் பார்வையிடுவார். இந்த திறப்பு விழாவையொட்டி இந்திய விமானப்படை விமானங்கள் பறப்பதுடன் கலைநிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது வரை உலகில் இருக்கும் உயரமான சிலை என்றால் அது சீனாவில் உள்ள புத்தர் சிலைதான். அதன் உயரம் 419 அடி. இனிமேல் உலகிலேயே மிக உயரமான பிரம்மாண்டமான சிலை என்றால், அது குஜராத்தில் திறந்து வைக்கப்பட உள்ள சர்தார் வல்லபாய் படேலின் சிலைதான். படேல் சிலையின் மொத்த உயரம் 787 அடி. சிலை அமைந்துள்ள பீடத்தின் உயரம் மட்டும் 190 அடி ஆகும்.