17 ஆவது மக்களவையின் நிறைவு நாள் கூட்டம், பிரதமர் நரேந்திர மோடியின் உரையுடன் நேற்று நிறைவடைந்தது. அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்புக்கும் பிரதமர் நன்றி தெரிவித்த நிலையில், “கடந்த ஐந்தாண்டு ஆட்சிக்காலத்தில் மிகப்பெரும் பெருமையாக ஜி 20 மாநாட்டுக்கு இந்தியா தலைமை வகித்தது. உலக அரங்கில் இந்தியா மீதான நன்மதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. கொரோனா காலகட்டத்தில் கூட இந்தியாவின் வளர்ச்சி தடுத்து நிறுத்தப்படவில்லை. சீர்திருத்தம், செயலாக்கம், மீட்டுருவாக்கமே எங்களது தாரக மந்திரம்
ஒரே நாட்டில் இரண்டு அரசியலமைப்பு இருக்கக் கூடாது. இதனால்தான் ஜம்மு காஷ்மீர் சிறப்பு சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது. எதிர்கால சந்ததியினருக்கு நாம் வழங்கும் கலாசார பெருமைகளின் மரபாக நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட்டுள்ளது.
17 ஆவது மக்களவையில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த மக்களவையில் மூன்று முக்கிய சீர்திருத்தங்கள் செய்யப்பட்டடுள்ளன. அவை - ஜம்மு காஷ்மீர் சிறப்பு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது, பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது, முத்தலாக் தடை சட்டம் கொண்டுவரப்பட்டது ஆகியவை.
இந்தியாவின் புதிய சட்டங்கள் வன்முறையை எதிர்த்துப் போராடக்கூடியவை. இளைஞர்களுக்கு அதிகாரம் தரக்கூடியவை. இந்தியாவில் உள்ள மக்கள் அனைவரும் முன்னேற்றம் அடைந்துள்ளனர். ராமர் கோயில் குறித்து மக்களவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம், வருங்காலச் சந்ததியினருக்கு அரசமைப்பின் வலிமையையும், நாட்டின் பெருமைகளையும் உணர்த்தும்” எனக் கூறினார்.