pm modi pt web
இந்தியா

ஒன்றரை மணி நேரமாக மணிப்பூரைப் பற்றி பேசாத மோடி; கடுப்பாகி வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சிகள்! ஆனால்..?

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி பதிலளித்து வருகிறார்.

PT WEB

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் , மத்திய அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் நேற்று முன்தினம் தொடங்கியது. மணிப்பூர் கலவரம் தொடர்பாக பிரதமர் பதிலளிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டதாக எதிர்கட்சிகள் தெரிவித்தன. இத்தீர்மானம் மீதான விவாதத்தில் எதிர்கட்சி உறுப்பினர்களும் ஆளும் கட்சி உறுப்பினர்களும் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டனர். இதில் இரண்டாம் நாள் விவாதத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உரையாற்றினார்.

pm modi

மூன்றாம் நாளான இன்று பிரதமர் மோடி நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலுரை வழங்கி வருகிறார். அதில் காந்தி என்ற பெயரை காந்தி குடும்பத்தினர் பயன்படுத்துவது குறித்து பிரதமர் மோடி விமர்சனம் செய்தார். அப்போது,

“இவர்களுக்கென்று ஒரு ஒரிஜினாலிட்டி கிடையாது. நாட்டின் திட்டங்களை எல்லாம் அவர்கள் குடும்பத்தினர் உடைய பெயர்களை பயன்படுத்தி வைத்து வந்தனர். காங்கிரஸ் கட்சி ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட ஒரு ஸ்தாபனம். அவர்களுடைய கொடி சின்னம் உள்ளிட்டவை கூட திருடப்பட்டது தான்.

எதிர்க்கட்சிகள் கூட்டணியில் அனைவருமே பிரதமர் வேட்பாளர்கள் தான். காந்தி என்ற பெயர் கூட காங்கிரஸ் கட்சியினரால் திருடப்பட்டது தான். எதிர்க்கட்சிகளின் கூட்டணி தலைகனம் கொண்ட கூட்டணி. பிரதமர்களுக்கான அருங்காட்சியகத்தை அமைத்துள்ளோம். அதில் கட்சி பாகுபாடு இல்லாமல் எல்லா பிரதமர்களுக்கும் மரியாதை கொடுக்கப்பட்டுள்ளது.

pmm modi

இலங்கை அனுமனால் அழிக்கப்படவில்லை ராவணனின் தலைக்கணத்தால் தான் அழிந்தது என சிலர் சொன்னார்கள் அது சரியானது தான். காங்கிரஸ் கட்சி உடைய எண்ணிக்கை நாளூரிலிருந்து 40 ஆக குறைந்துள்ளது அதை இதனுடன் பொருத்திப் பார்க்க வேண்டும். உங்களுடைய அகங்காரத்திற்கு 2024 ஆம் ஆண்டு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். ஒரு ஏழைத்தாயின் மகன் இன்று பிரதமராக இருக்கிறேன். ஒரு ஏழைத் தாயின் மகன் பிரதமராக இருப்பதை இவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை” என்றார்.

பிரதமர் மோடி பேசத் தொடங்கி ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக மணிப்பூர் விவகாரம் குறித்து பேசவில்லை. அவரது பேச்சுக்கு நடுவே மணிப்பூர் பற்றி பேசுங்கள் என எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கமிட்டு வந்தனர். ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் கடந்ததால் அவர்கள் பொறுமையிழந்து வெளிநடப்பு செய்தனர். ஆனால், எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த உடனே மணிப்பூர் விவகாரம் குறித்து பேசத் தொடங்கினார் பிரதமர் மோடி.