pm modi pt web
இந்தியா

“அவரை ஒதுக்கிவிட்டீர்கள்” - காங்கிரஸ் தலைவரை சுட்டிக்காட்டி நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி!

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி பதிலளித்து வருகிறார்.

Angeshwar G

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், மத்திய அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் நேற்று முன்தினம் தொடங்கியது. மணிப்பூர் கலவரம் தொடர்பாக பிரதமர் பதிலளிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டதாக எதிர்கட்சிகள் தெரிவித்தன. இத்தீர்மானம் மீதான விவாதத்தில் எதிர்கட்சி உறுப்பினர்களும் ஆளும் கட்சி உறுப்பினர்களும் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டனர். இதில் இரண்டாம் நாள் விவாதத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உரையாற்றினார்.

PMModi

மூன்றாம் நாளான இன்று பிரதமர் மோடி நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலுரை வழங்கி வருகிறார். அதில், தான் 2018 ஆம் ஆண்டு எதிர்கட்சிகள் மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவருவதைப் பற்றி கூறியதை குறிப்பிட்டு பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், “நாங்கள் கொண்டு வந்திருக்க கூடிய டேட்டா பாதுகாப்பு மசோதா நாட்டு மக்களுக்கு மிகவும் அவசியமாகிறது. ஆனால், அதை நீங்கள் கைவிட சொல்கிறீர்களா. எதிர்காலம் தொழில்நுட்பத்தால் இயங்கப் போகின்றது. அதற்கு நாங்கள் இப்பொழுது கொண்டு வந்திருக்கக்கூடிய மசோதாக்கள் பெரும்பலனுடையதாக இருக்கும். எதிர்க்கட்சிகளான நீங்கள் எல்லா தருணத்திலும் மக்களுக்கு துரோகத்தை தான் செய்திருக்கிறீர்கள். தற்பொழுது நாட்டு மக்களின் நலனுக்காக நாங்கள் மசோதாக்களை கொண்டு வந்தால், அதை தடுப்பதன் மூலம் அந்த துரோகத்தை செய்கிறீர்கள். உங்களுடைய அரசியல் உங்களது மனநிலையை காட்டுகிறது. எவற்றிலெல்லாம் அரசியல் செய்யக் கூடாதோ அவற்றில் எல்லாம் செய்து கொண்டிருக்கிறீர்கள்.

ஆதிர் ரஞ்சன்

கட்சியை விட தேசம் முக்கியம் என்று மனதில் கொள்ள வேண்டும். நாட்டு மக்களுக்கு துரோகம் செய்யக் கூடாது. எதிர்க்கட்சிகள் அதிகார பசியில் இருக்கிறார்கள். அவர்களுடைய பசிக்கு ஏழைகளை உணவாக கேட்கிறார்கள். ஒருமுறை நோபல் போட்டால் பரவாயில்லை. நீங்கள் ஏன் திரும்பத் திரும்ப நோபாலை போட்டுக் கொண்டிருக்கிறீர்கள். கொஞ்சமாவது தயாராக மாட்டீர்களா. நாட்டுக்கு நீங்கள் ஏமாற்றத்தை தவிர வேறு எதையும் தரவில்லை.

உங்களுக்கு ஐந்து ஐந்து வருடம் கொடுத்தோம். ஆனால் நீங்கள் இன்னும் கூட தயாராகாமல் இருக்கிறீர்கள். ஊழல் கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்து எங்கள் அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்திருக்கிறீர்கள். மக்களவையின் காங்கிரஸ் கட்சியின் தலைவராக அதிரஞ்சன் சௌத்ரி இருக்கிறார். ஆனால், அவருக்கு கூட பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை. கல்கத்தாவில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அதிலிருந்து அவர் எதிர்க்கட்சிகளால் ஒதுக்கப்பட்டு விட்டார்” என்றார்.