கர்நாடகாவின் சிர்சி பகுதியில் பரப்புரை மேற்கொண்ட பிரதமர் மோடி, “தேர்தல் தோல்விக்கு காரணம் கூற மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களையே காங்கிரஸ் பயன்படுத்தி வந்தது. விவிபேட் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு காங்கிரஸ் கட்சிக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளது. மேலும், காங்கிரஸ் மற்றும் அவர்களின் கூட்டாளிகளால்தான் 70 ஆண்டுகளாக ராமர் கோயில் கட்டப்படாமல் இருந்தது.
ராமர் கோயில் அறங்காவலர்கள் காங்கிரஸ் கட்சியினரை ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு அழைத்தனர். ராமர் கோவில் திறப்பு விழா அழைப்பிதழை அவமதித்தவர்களுக்கு தேர்தலில் வாக்களிக்காமல் மக்கள் நிராகரிப்பார்கள்” என தெரிவித்தார்.
ஒடிசா மாநிலத்தில் தேர்தல் பரப்புரையை தொடங்கிய ராகுல் காந்தி கட்டாக்கில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது, “ஒடிசாவில் கனிமவள முறைகேட்டில் 9 லட்சம் கோடி ரூபாய் வரை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சி அமைந்த பிறகு அந்த பணம் மக்களுக்கே பகிர்ந்து அளிக்கப்படும். 22 பெரும் பணக்காரர்களுக்காகவே பிரதமர் மோடி பணியாற்றி வருகிறார். தாங்கள் ஆட்சிக்கு வந்தால் கோடிக்கணக்கான மக்களை லட்சாதிபதிகளாக மாற்றுவோம். பழங்குடி இன மக்களை பாஜக அரசு அவமதித்து வருகிறது. பழங்குடி இன மக்களின் உரிமைகளை காங்கிரஸ் மீட்டுக் கொடுக்கும்” என தெரிவித்தார்.