திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரதமர் மோடி நாளை சாமி தரிசனம் செய்வதை அடுத்து, அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 352 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. பாஜக மட்டும் 302 இடங்களில் வெற்றிப் பெற்றது. இதையடுத்து 2 வது முறையாக மோடி, கடந்த 30 ஆம் தேதி பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். இந்த நிலையில் அவர் இன்று கேரள மாநிலம் குருவாயூர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து துலாபாரம் கொடுத்தார். அதனைத்தொடர்ந்து மாலத்தீவு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் பிரதமர் மோடி நாளை ஒரு நாள் பயணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார். மாலத்தீவு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மோடி தொடர்ந்து இலங்கை செல்கிறார். பின்னர் இலங்கையிலிருந்து இந்தியா திரும்பும் பிரதமர் நேரடியாக திருப்பதி சென்று, ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். இதற்காக நாளை மாலை 3.00 இலங்கைத் தலைநகர் கொழும்பிலிருந்து மோடி தனி விமான மூலம் புறப்பட்டு மாலை 04.30 மணிக்கு ரேணிகுண்டா விமான நிலையம் வந்தடைவார். பின் அங்கிருந்து கார் மூலம் திருமலைக்குச் செல்லும் மோடி, அங்கு பத்மாவதி விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார்.
அதனைதொடர்ந்து மாலை 6 மணி அளவில் திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்கிறார். அதன் பிறகு 7.20 மணிக்கு திருமலையில் இருந்து காரில் ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு சென்று அங்கிருந்த தனி விமான மூலம் டெல்லிக்கு புறப்படுகிறார். மோடி வருகையையொட்டி திருப்பதியில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பிரதமருடன் ஆந்திர மாநில ஆளுநர் நரசிம்மன்,முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோரும் சாமி தரிசனம் செய்வார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.