கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி, இன்று தமிழ்நாடு வருகிறார்.
உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் இருந்து பிற்பகல் தனி விமானம் மூலம் புறப்படும் பிரதமர் நரேந்திர மோடி, கேரள மாநிலம், திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வருகிறார். > அங்கிருந்து மாலை 3.55 மணிக்கு எம்.ஐ.17 ஹெலிகாப்டர் மூலம் புறப்படும் அவர், கன்னியாகுமரியில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தை மாலை 4.35 மணிக்கு அடைகிறார். அடுத்த 5 நிமிடத்தில் வாகனம் மூலம் அரசு விருந்தினர் மாளிகை செல்லும் அவர், அங்கு சற்று நேரம் ஓய்வு எடுக்கிறார்.
பின்னர் மாலை 5.20 மணிக்கு சாலை மார்க்கமாக பூம்புகார் படகு தளத்திற்கு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, படகு மூலம் விவேகானந்தர் மண்டபத்திற்கு 5.40 மணிக்கு செல்கிறார். தியான மண்டபத்திற்கு செல்லும் பிரதமர், தனது தியானத்தை தொடங்குகிறார். நாளை மறுநாள் பிற்பகல் வரை தியானத்தில் ஈடுபடும் மோடி, மாலை 3 மணிக்கு படகு மூலம் கரை திரும்புகிறார்.
அங்கிருந்து சாலை மார்க்கமாக கன்னியாகுமரி ஹெலிகாப்டர் தளத்திற்கு செல்லும் பிரதமர் நரேந்திரமோடி, அங்கிருந்து மீண்டும் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் சென்று, மாலை 4.05 மணிக்கு டெல்லிக்கு தனது தனி விமானத்தில் புறப்படுகிறார்.
பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி கன்னியாகுமரி முழுவதும் சிறப்பு பாதுகாப்பு படையினர் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. பிரதமர் வந்திறங்கும் ஹெலிகாப்டர் தளம், பிரதமர் செல்லும் வழிகள், விவேகானந்தர் நினைவு மண்டபம், மற்றும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலாத் தலங்களை சிறப்பு பாதுகாப்புப்படை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.
குமரி கடல் பகுதிகளில் இந்திய கடற்படை வீரர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமரின் வருகையை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினரும், தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.