இந்தியா

மோடி திறந்து வைத்த தேசிய போர் நினைவுச் சின்னத்தின் சிறப்புகள் என்ன?

மோடி திறந்து வைத்த தேசிய போர் நினைவுச் சின்னத்தின் சிறப்புகள் என்ன?

webteam

தேசிய போர் நினைவுச் சின்னத்தை திறந்து வைத்து இன்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளார்.

கடந்த 2014 ஆண்டு அதிநவீன வடிவில் உலகத்தரம் வாய்ந்த தேசிய போர் நினைவுச் சின்னத்தை அமைக்க வேண்டும் என்று  பிரதமர் மோடி தன் விருப்பத்தை தெரிவித்திருந்தார். அதன்படி சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டிற்காக போரில் உயிர் நீத்து வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு இந்திய அரசு ஒரு புதிய நினைவகத்தை நிறுவியுள்ளது. இந்த நினைவுச் சின்னத்தை பிரதமர் மோடி இன்று நாட்டிற்கு அர்ப்பணித்தார். மேலும் இந்த விழாவில் பிரதமர் மோடி முன்னாள் ராணுவ வீரர்கள் முன்பு உரையாற்றினார்.

இந்நிலையில் இந்த நினைவகத்திலுள்ள சிறப்பு அம்சத்தைக் காணலாம்.

இந்த நினைவுச் சின்னம் 40 ஏக்கர் பரப்பளவில் டெல்லியிலுள்ள இந்தியா கேட் அருகே அமைந்துள்ளது.இந்தப் போர் நினைவுச் சின்னம் இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டிற்காக உயிர்நீத்த 25,942 ராணுவ வீரர்களுக்கு சமர்ப்பணமாக அமைக்கப்பட்டுள்ளது. இது 4 சக்கர வடிவங்களைக் கொண்டுள்ளது. அவை:

முதல் சக்கரத்தின் பெயர் ‘அமர் சக்ரா’. இதில் போரில் உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒரு அணையா நெருப்பு அமைக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது சக்கரத்தின் பெயர் ‘வீர்தா சக்ரா’. இந்தச் சக்கரத்தில் 6 வெண்கல சிலைகள் உள்ளன. அத்துடன் இதில் போர்காலங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் சித்திரமாக பதிக்கப்பட்டுள்ளன.

முன்றாவது சக்கரத்தின் பெயர் ‘தியாக் சக்ரா’. இது கிரானைட் செங்கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. இதிலுள்ள செங்கலில் சுதந்திரத்திற்குப் பிறகு உயிர் தியாகம் செய்த வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளது.

நான்கவது சக்கரத்தின் பெயர் ‘ரக்க்ஷாக் சக்ரா’. இச்சக்கரம் மற்ற மூன்று சக்கரங்களை சுற்றியுள்ளது. மேலும் இதில் 600 மரங்கள் உள்ளன. அவை அனைத்தும் நாட்டிற்காக எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சக்கரங்கள் தவிர மற்றும் பல சிறப்பு அம்சங்கள் இக்கூடத்திலுள்ளன. குறிப்பாக செயற்கை விளக்குகள், பெரிய நடைபாதைகள் உள்ளன. 

மேலும் இந்நினைவகத்தில் ராணுவ வீரர்களின் உயரிய விருதான பரம்வீர் சக்ரா விருது பெற்ற 21 வீரர்களின் மார்பளவு சிலைகள் இடம்பெற்றுள்ளன.