அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் வருகைக்காக இந்தியாவே காத்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இந்தியாவுக்கு வருகை தரும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேரடியாக குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்கு வந்திறங்குகிறார். நண்பகல் 11.40 மணிக்கு ட்ரம்ப் வரும் நிலையில், விமான நிலையத்திலிருந்து சபர்மதி ஆசிரமம் வரை, லட்சக்கணக்கானோர் பங்கேற்று பிரமாண்ட வரவேற்பு அளிக்கின்றனர்.
மனைவி மெலனியாவுடன் 12.15 மணிக்கு சபர்மதி ஆசிரமம் செல்லும் ட்ரம்ப், அங்கு மகாத்மா காந்தி தங்கியிருந்த அறை மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க பொருட்களை பார்வையிடுகிறார். பிற்பகல் 1.05 மணி அளவில், ஒரு லட்சம் பேர் வரை அமரும் வகையில் கட்டப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்.
நாளையும் ட்ரம்ப் இந்தியாவில் தங்கி அரசு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். இந்நிலையில் ட்ரம்பின் வருகைக்காக இந்தியாவே காத்திருப்பதாக பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். அமெரிக்க வெள்ளை மாளிகையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கிளம்பும் வீடியோவை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்வீட் செய்துள்ளார்.
அதனை பகிர்ந்து ட்வீட் செய்துள்ள பிரதமர் மோடி, ''உங்களுக்காக இந்தியாவே காத்திருக்கிறது. ட்ரம்பின் வருகையால் இந்தியா-அமெரிக்கா இடையேயான நட்புறவு மேலும் வலுப்பெறும். விரைவில் உங்களை அகமதாபாத்தில் சந்திக்கிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.