இந்தியா

ஆயுஷ்மான் பாரத் திட்டம் குறித்து தெரிந்து கொள்ளுங்களேன்..!

ஆயுஷ்மான் பாரத் திட்டம் குறித்து தெரிந்து கொள்ளுங்களேன்..!

Rasus

நாடு முழுவதும் 50 கோடி ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில், ஆயுஷ்மான் பாரத் எனப்படும் மருத்துவ பாதுகாப்புத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று தொடங்கி வைக்கிறார். இதன் சிறப்பம்சங்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.

ஆயுஷ்மான் பாரத் எனப்படும் மருத்துவப் பாதுகாப்புத் திட்டத்தின் மூல‌ம் ஓராண்டுக்கு, ஒரு குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் வரை ஆகும் மருத்துவச் செலவுகளை அரசே ஏற்றுக் கொள்ளும். அதன்படி நாட்டின் எந்தவொரு மூலையில் இருக்கும் அரசு மருத்துவமனைகளிலோ, அல்லது தனியார் மருத்துவமனைகளிலோ பயனாளர்கள் சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியும். இந்தப் புதிய திட்டத்தின் கீழ் மத்திய அரசுக்கு ஆண்டுதோறும் கூடுதலாக 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வரை செலவாகும்.

சுமார் 15 ஆயிரம் மருத்துவமனைகளில் இருந்து இந்தத் திட்டத்தில் இணைத்துக் கொள்ளும்படி அரசுக்கு விண்ணப்பங்கள் வந்திருப்பதாகவும், அவற்றில் 7 ஆயிரத்து 500 விண்ணப்பங்கள் தனியார் மருத்துவமனையை சேர்ந்தவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் இணைய ஏறத்தாழ அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் மத்திய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இன்று இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதும், அடுத்த மூன்று மாதங்களுக்குள், அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்தப்படும்.

தெலங்கானா, ஒடிசா, டெல்லி, கேரளா மற்றும் பஞ்சாப் மாநிலங்கள் இந்தத் திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால், அம்மாநிலங்களில் மட்டும் அமலுக்கு வராது. திட்டத்துக்காக செலவாகும் மொத்தத் தொகையில் மத்திய அரசு 60 சதவிகிதமும், மாநில அரசு 40 சதவிகிதமும் பகிர்ந்து கொள்ளும்.

சமூக பொருளாதார கணக்கெடுப்பு புள்ளி விவரத் தகவல்கள் அடிப்படையில் பயனாளிகள் அடையாளம் காணப்படுவார்கள். கூலித் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிக‌ள், வீட்டு வேலைக்காரர்கள், சுமை தூக்குபவர்கள் உள்ளிட்ட 11 வகையான தொழிற்பிரிவுகளில் இருப்பவர்கள் இந்தத் திட்டத்தின்படி அரசின் உதவியை பெற தகுதியானவர்கள். ரேஷன் அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒரு அட்டையை வைத்தே அரசின் சலுகையை மக்கள் பெற்றுக் கொள்ள முடியும்.

ஏற்கெனவே தமி‌ழகத்தில் நடைமுறையில் உள்ள முதல் அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்துடன், மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டமும் ஒருங்கிணைத்து செயல்படுத்தப்படும். இதன் மூலம் தமிழகத்தில் 77 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 2 கோடியே 85 லட்சம் பேர் பயன் பெறுவார்கள்.