இந்தியா

ஆப்பிரிக்க நாடுகளுக்கு செல்கிறார் பிரதமர் மோடி

ஆப்பிரிக்க நாடுகளுக்கு செல்கிறார் பிரதமர் மோடி

webteam

பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாள் அரசுமுறை பயணமாக இன்று மூன்று ஆப்பிரிக்க நாடுகளுக்கு புறப்பட்டுச் செல்கிறார்.

முதலில் பிரதமர் ருவாண்டாவுக்கு செல்லவுள்ளதாகவும், இதன் மூலம் அந்நாட்டுக்குச் சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை அவர் பெறவுள்ளதாகவும் மத்திய வெளியறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்பின், பிரதமர் நரேந்திர மோடி உகாண்டாவுக்கு செல்கிறார். அங்கு 24 மற்றும் 25 ஆம் தேதி என இருநாட்களுக்கு அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இறுதியாக 25 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி அங்கு நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கிறார். 

ஆப்பிரிக்க நாடுகளுடனான சுற்றுப்பயணத்தின் போது இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து அந்தந்த நாட்டின் அதிபர்களை சந்தித்து பிரதமர் மோ‌டி பேச்சுவார்த்தை நடத்துவார் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ருவாண்டாவில் தேசிய பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்துக்கு ஒரு பசு வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். உகாண்டா நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி முக்கிய உரையாற்றுகிறார். இதன் மூலம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை அவர் பெறவுள்ளார். தென் ஆப்பிரிக்காவில் அதிபர் சிரில் ரமாபோசாவை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். மேலும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் நாடுகளின் தலைவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.