18-வது மக்களவைத் தேர்தலில் எந்தக் கட்சியும் பெரும்பான்மையைப் பெறாத நிலையில், பாஜக கூட்டணியுடன் ஆட்சியமைப்பதற்கான நிலையை அக்கட்சி எட்டியுள்ளது. நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (ஜூன் 4) எண்ணப்பட்டன. இதில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளை கைப்பற்றியது. இதில் பா.ஜ.க. 240 தொகுதிகளை கைப்பற்றியது.
மத்தியில் ஆட்சியமைக்க 272 தொகுதிகளை கைப்பற்றவேண்டிய நிலையில் பாஜக கூட்டணி 292 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதில் கூட்டணியில் இடம்பெற்றிருந்த தெலுங்கு தேசம் 16 தொகுதிகளையும், ஐக்கிய ஜனதாதளம் 12 தொகுதிகளையும் கைப்பற்றின. இதையடுத்து, மோடி 3வது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார். பதவியேற்பு விழா வரும் 8ஆம் தேதி நடைபெற உள்ளது.
முன்னதாக இன்று, மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்குப் பிறகு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவைச் சந்தித்த பிரதமர் மோடி, 17வது மக்களவைக்கான தமது பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை அளித்தார். அத்துடன், 17வது மக்களவையை கலைக்கும் அமைச்சரவைக் கூட்டத்தின் பரிந்துரை கடிதத்தையும் அவரிடம் வழங்கினார்.
இதையும் படிக்க: அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கிய பாஜக பெண் வேட்பாளர்கள்.. உறுதியான தோல்வி முகம்!
இதுகுறித்து குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”நரேந்திர மோடி குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்தார். மத்திய அமைச்சர்கள் குழுவுடன் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். மோடியின் ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டதுடன், புதிய அரசு அமையும் வரை பதவியில் நீடிக்குமாறு பிரதமரையும் மத்திய அமைச்சர்கள் குழுவையும் கேட்டுக்கொண்டார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி மீண்டும் ஆட்சியமைப்பதற்கு ஆந்திர முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, பச்சைக்கொடி காட்டியுள்ளார். முன்னதாக அவர், தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே தாம் இருப்பதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.