மோடி, கச்சத்தீவு ட்விட்டர்
இந்தியா

’கட்சத்தீவை மீட்டு தாருங்கள்’ என்று தமிழக முதல்வர் கேட்கிறார்; கொடுத்தது இந்திரா காந்திதானே: பிரதமர்

மணிப்பூர் வன்முறை தொடர்பாக, மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு மக்களவையில் பிரதமர் மோடி, இன்று (ஆகஸ்ட் 10) பதிலளித்தார்.

Prakash J

கச்சத்தீவு குறித்து பிரதமர் மோடி விளக்கம்

இன்றைய நம்பிக்கையில்லா தீர்மானத்தின் விவாதத்தின்போது மக்களவையில், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேசிய பிரதமர் மோடி, மணிப்பூர் தொடர்பாகப் பேசாததைக் கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அவர்கள் வெளியேறிய பின்பு மணிப்பூர் பற்றிப் பேசிய மோடி, தொடர்ந்து கச்சத்தீவு குறித்தும் பேசினார்.

அப்போது, அவர், “வெளிநடப்பு செய்தவர்களிடம் கேளுங்கள் கச்சத்தீவு என்றால் என்ன? அது எங்கே அமைந்துள்ளது? தமிழ்நாடு முதல்வர், ’கட்சத்தீவை மீட்டுத் தாருங்கள்’ என்று எனக்கு கடிதம் எழுதுகிறார். இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்த இந்தத் தீவு, தற்போது அந்நிய நாட்டுக்குச் சொந்தமாக உள்ளது. இது, பாரத மாதாவின் ஒரு பகுதி இல்லையா? அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தது பாரத மாதாவின் ஓர் அங்கத்தைச் சிதைப்பதாகும்” என்றார்.

இதையும் படிக்க: ”இந்த சம்பவத்தால் தற்கொலை செய்ய நினைத்தேன்”-கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மற்றொரு மணிப்பூர் பெண்

எ.வ.வேலு, ஸ்மிருதி இரானி, மோடி

தமிழக அமைச்சரை விமர்சித்த மோடி

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓர் அமைச்சர் சமீபத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். தமிழகத்தையும், இந்தியாவையும் பிரித்து அவர் பேசியது குறித்து ”சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி, கர்மவீரர் காமராசர், எம்.ஜி.ஆர் மற்றும் அப்துல் கலாம் போன்றோரை அளித்த தமிழகத்தில் இப்படி நடப்பது வருத்தமாக இருக்கிறது’’ என மோடி குறிப்பிட்டார்.

கச்சத்தீவை மீட்டெடுக்க அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்!

தமிழ்நாடு மீனவர்களின் நலன் காக்க கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும் என தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்த விவகாரத்தில் முன்னாள் தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்னமும் நிலுவையில் உள்ளது. எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுகிறார்கள். மேலும், கச்சத்தீவில் உள்ள தேவாலய திருவிழாவுக்குச் செல்வதற்குக்கூட இலங்கை அரசின் அனுமதி தேவைப்படுகிறது என்பது தமிழ்நாடு மீனவர்களின் வருத்தமாக உள்ளது. இந்த விவகாரத்தில் திமுகவின் கவனத்தை பிரதமர் மோடி ஈர்த்திருப்பது பிரதானமாகப் பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: 3 நாட்கள் மீதமிருக்கையில் பாகிஸ்தான் நாடாளுமன்றம் இரவோடு இரவாக கலைக்கப்பட்டது ஏன்?- பின்னணி இதுதான்!

கடந்த ஜூலை மாதம் கடிதம் எழுதிய தமிழக முதல்வர்!

கச்சத்தீவை மீட்பது, இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாப்பது குறித்தும், இலங்கை தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, அவர்களது உரிமைகள், சுதந்திரம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வது குறித்தும், இந்தியா வரும் இலங்கை அதிபரிடம் வலியுறுத்துமாறு பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த (ஜூலை 20) மாத இறுதியில் கடிதம் எழுதியிருந்தார்.

அந்தச் சமயத்தில் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்திருந்தார். அதைக் கவனத்தில்கொண்டே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கச்சத்தீவு இலங்கைக்கு கைமாறி 49 ஆண்டுகள் நிறைவு!

இந்தியாவிடமிருந்த கச்சத்தீவு இலங்கைக்கு கைமாறி கடந்த ஜூன் 28ஆம் தேதியுடன் 49 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது. இந்தியாவின் ராமேஸ்வரத்திற்கும் இலங்கையின் நெடுந்தீவிற்கும் இடையில் அமைந்துள்ள மிகச் சிறிய தீவே, கச்சத்தீவு. ராமேஸ்வரத்திலிருந்து 12 கடல் மைல் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவிலிருந்து 8 கடல் மைல் தொலைவிலும், பாக் நீரிணையில் அமைந்துள்ளது கச்சத்தீவு. இதன் மொத்த பரப்பளவு 285 ஏக்கர். இதன் அதிகபட்ச அகலமே 300 மீட்டர்தான். ராமேசுவரத்திலிருந்து சுமார் இரண்டரை மணி நேரத்திலும், இலங்கையின் நெடுந்தீவு மற்றும் தலைமன்னாரிலிருந்து சுமார் ஒன்றரை மணி நேரத்திலும் இத்தீவை படகு மூலம் அடையலாம்.

இதையும் படிக்க: ”போருக்கு ஆயத்தமாகுங்கள்” - அதிகாரிகளுக்கு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவு

1920 முதல் விஸ்வரூபமெடுத்த கச்சத்தீவு பிரச்னை!

ராமநாதபுரம் ராஜாவின் ஜமீன்தாரி உரிமைகளை வைத்தே 1974வரை கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதி என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. ஆனால், இது தொடர்பான எல்லா ஆவணங்களும் புதுடெல்லிக்கு எடுத்துச் செல்லப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. எனினும், 1920களிலேயே கச்சத்தீவு யாருக்குச் சொந்தம் என்ற பிரச்னை தொடங்கியதாகக் கூறப்படுகிறது. இந்திய சுதந்திரத்திற்குப் பிறகும் இந்தப் பிரச்னை அவ்வப்போது எழுப்பப்பட்டதாகவும், ஆனால் இந்த விவகாரத்தில் இந்திய அரசு பெரிதாக ஆர்வம் காட்டவில்லை எனவும் சொல்லப்படுகிறது.

கொந்தளிப்பை ஏற்படுத்தும் தமிழக மீனவர்கள் பிரச்னை!

இந்த நிலையில்தான், 1974 ஜூன் 28 அன்று இந்திய - இலங்கை அரசுகளுக்கு இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில், இரு நாடுகளுக்கும் இடையிலான கடல் எல்லைக் கோடு வரையறுக்கப்பட்டது. இதன்மூலம் கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில், இந்திய மீனவர்களின் மீன்பிடிக்கும் உரிமையும், கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத்துக்கு பக்தர்கள் பாஸ் போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்கள் இன்றி சென்றுவரும் உரிமையும் குறிப்பிடப்பட்டிருந்தன. 1974 மற்றும் 1976ஆம் ஆண்டு ஒப்பந்தங்களின்படி கச்சத்தீவு முழுமையாக இலங்கைக்கு அளிக்கப்பட்டுவிட்ட நிலையில், அந்தப் பகுதியில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவது, மீனவர்களைக் கைதுசெய்து, படகுகளைப் பறிமுதல் செய்வது ஆகியவை தமிழ்நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இதையும் படிக்க: ரிசர்வ் வங்கியின் விதிகளை மீறிய வங்கிமேலாளர்! மனுக்களை தள்ளுபடி செய்த நீதிமன்றம்!