‘நீரின்றி அமையாது உலகு’ என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி சுதந்திர தின உரையாற்றினார்.
நாட்டின் 73ஆவது சுதந்திர தின இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை 7.30 மணியளவில் பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினர். அத்துடன் ராணுவத்தினர் அளித்த அணிவகுப்பு மரியாதையையும் பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி உரையாற்றினார். அதில், “புதிய அரசு பதவியேற்று இன்னும் 10 வாரங்கள் கூட நிறைவடையவில்லை அதற்குள் அனைத்து துறைகளிலும் சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. குறிப்பாக காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து மற்றும் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 35ஏ ரத்து ஆகிய சர்தார் பட்டேலின் கனவு நனவாகியுள்ளது. இன்று நாம் சுதந்திர தினம் கொண்டாடி வரும் நிலையில் ஒரு சில மாநிலங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. அம்மாநிலங்களில் விரைவில் இயல்புநிலை திரும்ப நாம் அனைவரும் துணை நிற்கவேண்டும்.
நம் நாட்டில் நீர் சேமிப்பின் முக்கியத்துவம் மிகவும் அவசியமானது. அதை நாட்டு மக்கள் அனைவரும் நன்கு அறிவர். அதற்காக தான் நாங்கள் ஜல்சக்தி என்ற புதிய அமைச்சகத்தை அமைத்துள்ளோம். 2014ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு நாட்டு மக்களின் மனதில் மிகப் பெரிய வருத்தம் தெரிந்தது. அதாவது இந்தியா எப்போதும் மாறும்? என்ற சிந்தனை நாட்டு மக்களிடம் அதிகம் இருந்தது. ஆனால் தற்போது 2019ஆம் ஆண்டு நாட்டு மக்களின் மனநிலை மிகவும் மாறியுள்ளது. தற்போது மக்கள் அனைவரும் தங்களின் கனவுகளை நோக்கி ஓட தொடங்கி விட்டனர். அத்துடன் அவர்களிடம் இருந்த வருத்தம் அனைத்தும் தற்போது மாறிவிட்டது. மக்கள் அனைவரும் நிச்சயம் இந்தியா நல்ல நிலைக்கு மாறும் என்ற நம்பிக்கைக்கு வந்துவிட்டனர்.
நாங்கள் எப்போதும் பிரச்னைகளை ஆரம்பிக்க விரும்பியதில்லை. அத்துடன் பிரச்னைக்கு தீர்வு காண்பது தள்ளிப்போட்டதும் இல்லை. ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதியில் முன்பு இருந்த முறை ஊழலுக்கு எளிதாக வழி வகுத்தது. மேலும் அங்கு பெண்கள், குழந்தைகள், பட்டியலினத்தவர் ஆகியோரின் உரிமைகள் பறிக்கப்பட்டு வந்தன. இந்த நிலை மாற்றவே புதிய முடிவு எடுக்கப்பட்டது.
மேலும் ‘நீரின்றி அமையாது உலகு’ என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி தண்ணீரின் முக்கியத்துவத்தை நாட்டு மக்களுக்கு உணர்த்தினார். அத்துடன் ‘ஜல் ஜீவன் திட்டம்’ இன்னும் வேகமாக செயல்படும்” எனத் தெரிவித்துள்ளார்.