மோடி எக்ஸ் தளம்
இந்தியா

ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு திட்டம்| செயல்படுத்தாத மேற்கு வங்கம், டெல்லி.. காட்டமாக விமர்சித்த மோடி!

”அரசியல் காரணங்களுக்காக ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு திட்டத்தை, டெல்லி மற்றும் மேற்கு வங்கத்தில், அந்த மாநில அரசுகள் அமல்படுத்தவில்லை” என பிரதமர் மோடி தெரிவித்தார்.

Prakash J

பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் ஜன் ஆரோக்யா யோஜனா திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவக் காப்பீட்டை பெற முடியும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்த திட்டத்தில் ஏற்கெனவே வருவாய் விதிகள் இருந்த நிலையில், 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு எந்த நிபந்தனையும் இல்லாமல் மருத்துவக் காப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இத்திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கிவைத்தார். இதன்மூலம் தற்போது நான்கரை கோடி குடும்பங்களில் உள்ள 70 வயதுக்கு மேற்பட்ட 6 கோடி மூத்த குடிமக்கள் பயன்பெறுவர் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது. இந்நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, “அரசியல் காரணங்களுக்காக ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு திட்டத்தை, டெல்லி மற்றும் மேற்கு வங்கத்தில், அந்த மாநில அரசுகள் அமல்படுத்தவில்லை. அந்த இரு மாநிலங்களைச் சேர்ந்த மூத்த குடிமக்கள் இலவச மருத்துவ சேவையை பெறமுடியாத நிலை இருப்பதை நினைத்து கவலையாக உள்ளது. இருமாநிலங்களில் உள்ள 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களிடம் இதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங், "உங்களிடம் குளிர்சாதன பெட்டி இருந்தால், ஆயுஷ்மான் பாரத் மூலம் பயனடைய முடியாது. உங்களிடம் பைக் இருந்தால், நீங்கள் பயனடைய முடியாது, நீங்கள் ஒன்றுக்கு ரூ.10,000 க்கு மேல் சம்பாதித்தால் பயனடைய முடியாது. டெல்லியில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், யாரும் பயனடைய மாட்டார்கள்” எனப் பதிலளித்துள்ளார்.

இதையும் படிக்க: ’என்கிட்ட பணம் இல்லை.. உங்ககிட்ட இருக்குமா’- ரத்தன் டாடாவின் எளிமையான குணம்பற்றி அமிதாப் நெகிழ்ச்சி!