இந்தியா

பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத் திட்டம் வெளியீடு !

webteam

இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்கும் முன்பே மோடியின் வெளிநாடு பயணத்திட்டம் குறித்து வெளியுறவுத்துறை திட்டம் வெளியிட்டுள்ளது. 

இந்தியாவில் அடுத்த பிரதமர் யார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி காணப்பட்ட நிலையில், தற்போது நடந்த மக்களவைத் தேர்தலில் 350 தொகுதிகள் வரை பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த வெற்றியின் மூலம் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி தனிபெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. இதன் மூலம் நரேந்திர மோடி தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.  வரும் 30 ஆம் தேதி நரேந்திர மோடி பதவியேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்க இருக்கும் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணத்திட்டம் குறித்து தற்போதே திட்டம் வகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக 2014 ஆம் ஆண்டு பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி அடிக்கடி வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தனர். ஆனால் அதனை பெரிதும் பொருட்படுத்தாத மோடி,கடந்த 5 ஆண்டுகளில் 44வெளிநாடுகளுக்கு 55 முறை  சென்றுள்ளார். நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்காக ரூ.2,021 கோடி செலவு செய்யப்பட்டதாக மத்திய அரசு தகவல் தெரிவித்தது.

இந்த சூழலில் பிரதமராக மோடி இரண்டாவது முறையாக பதவி ஏற்ற பிறகு எந்தெந்த நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகம் எழுந்தது. இந்நிலையில் தற்போது அவரின் வெளிநாட்டு பயணத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மோடி பதவி ஏற்ற பின் ஜூன் 13 ஆம் தேதி கிர்கிஸ்தானில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க உள்ளதாக வெளியு‌வுத்துறை தெரிவித்துள்ளது. மேலும் ஜூன் 28 -ல் ஜப்பான் சென்று 2 நாள் ஜி-20 மாநாட்டில் பங்கேற்கிறார்.

தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் பிரான்ஸ் நாட்டிற்கும், செப்டம்பரில் ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளார். அதனைத்தொடர்ந்து நவம்பரில் தாய்லாந்து, பிரேசில் நாடுகளுக்கும் மோடி பயணம் மேற்கொள்ளகிறார். இதன் மூலம் பிரதமராக மோடி பதவி ஏற்ற பின் 6 மாதங்கள் தொடர்ந்து வெளிநாடு பயணம் மேற்கொள்ள போகிறார் என்று தெரியவந்துள்ளது. மோடியின் இந்த வெளிநாட்டு பயணத்திட்டம் குறித்து சிலர் “பதவியேற்கும் முன்பே வெளிநாடு பயணத் திட்டம்” என்று விமர்சனம் செய்கின்றனர்.