பதவியேற்றார் பிரதமர் மோடி pt web
இந்தியா

உயர்மட்ட பாதுகாப்புக் குழுவில் மாற்றம் செய்யாத பிரதமர் மோடி – கொள்கை மாற்றங்கள் ஏதேஉம் இருக்குமா?

கணபதி சுப்ரமணியம்

பாதுகாப்புத்துறை அமைச்சர், உள்துறை அமைச்சர், நிதியமைச்சர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோர் "கேபினட் கமிட்டி ஆன் செக்யூரிட்டி" என அழைக்கப்படும் பாதுகாப்புத் தறை விவரங்களுக்கான உயர்மட்ட குழுவில் இடம் பெறுகின்றனர். பிரதமர் தலைமையில் செயல்பட்டு முக்கிய பாதுகாப்புத் துறை விவகாரங்களில் முடிவெடுக்கும் இந்த குழுவில் தேசிய பாதுகாப்பு செயலரும் இடம் பெறுகிறார்.

பிரதமர் மோடி பதவியேற்பு விழா

மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள நரேந்திர மோடி, இந்த உயர்மட்ட குழுவில் எந்த மாற்றமும் செய்யாததால் தற்போதைய கொள்கைகள் தொடரும் என அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

பாதுகாப்புத்துறை அமைச்சராக ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சராக அமித் ஷா, வெளியுறவுத் துறை அமைச்சராக ஜெய்சங்கர் மற்றும் நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் ஆகியோர் முன்பு இருந்த பதவிகளையே தொடர்ந்து வகிப்பார்கள் என பிரதமர் முடிவு செய்துள்ளார். ஆனால், கேபினட் அமைச்சர் அந்தஸ்தில் உள்ள தேசிய பாதுகாப்பு செயலர் அஜித் தோவல் அதே பொறுப்பிலே தொடர்வாரா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொள்கை மாற்றங்கள் ஏதேனும் இருக்குமா?

உயர்மட்ட குழுவில் மாற்றங்கள் இல்லையென்பதால், சீன எல்லையிலே உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தி படைகளை தயார் நிலையில் வைப்பது மற்றும் பாகிஸ்தான் எல்லையிலே தாக்குதல் ஏதேனும் நடைபெற்றால் அதற்கு வலுவான பதிலடி கொடுப்பது போன்ற மோடி அரசின் கொள்கைகளில் எந்த வித மாற்றமும் இருக்காது என கருதப்படுகிறது.

மேலும் முப்படைகளுக்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களை உள்நாட்டிலேயே தயாரிப்பது மற்றும் முப்படைகளை ஒருங்கிணைப்புடன் செயல்பட வைப்பது போன்ற கொள்கைகளிலும் மாற்றம் இருக்காது என கருதப்படுகிறது.

Rajnath Singh

சர்ச்சைக்குரிய "அக்னிவீர்" ராணுவ வீரர்கள் திட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கோரிக்கை படி மாற்றங்கள் செய்யப்பட்டாலும், அந்தத் திட்டம் கைவிடப்படாது எனவும் அதிகாரிகள் கருதுகின்றனர். பாதுகாப்புத் துறைக்காக பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதி தற்போதைய நிலையிலேயே தொடரும் எனவும் தேவையற்ற செலவுகளை தவிர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர்கள் கருதுகிறார்கள்.