இந்தியா

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனை சந்தித்த பிரதமர் மோடி 

webteam

ஜி-7 உச்சி மாநாட்டிற்காக பிரான்ஸ் சென்றடைந்த பிரதமர் மோடி, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

பஹ்ரைனில் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி, அங்கிருந்து ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரான்ஸின் பியாரிட்ஸ் நகருக்கு வந்தடைந்தார். அவரை பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் வரவேற்றார். இதைத் தொடர்ந்து, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனை சந்தித்த பிரதமர் மோடி, வர்த்தகம், ராணுவம், புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவற்றில் இரு நாட்டுக்கும் இடையே வலுவான பிணைப்பை ஏற்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்தப் பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்ததாகவும், இதன் மூலம் இருநாட்டு மக்களும் பெருமளவில் பயன்பெறுவார்கள் என்றும் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். போரிஸ் ஜான்சனுடனான சந்திப்பின் போது, ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி த்ரில் வெற்றிப் பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்து பேச்சு வார்த்தையை தொடங்கியதாக வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

இதே போல் ஐ.நா. பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குத்தேரஸையும் பிரதமர் மோடி சந்தித்தார். ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவையும் மோடி சந்தித்து பேசினார். ஜம்மு- காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட நிலையில், பிரிட்டன் பிரதமர் மற்றும் ஐ.நா. பொதுச் செயலாளரை பிரதமர் மோடி சந்தித்திருப்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.