இந்தியா

யஷ் to ஸ்ரீநாத்.. கர்நாடகாவில் பிரபலங்களைச் சந்தித்த பிரதமர் மோடி! இது தேர்தல் கணக்கா!?

யஷ் to ஸ்ரீநாத்.. கர்நாடகாவில் பிரபலங்களைச் சந்தித்த பிரதமர் மோடி! இது தேர்தல் கணக்கா!?

webteam

கர்நாடகாவுக்குச் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்குள்ள பிரபலங்களைச் சந்தித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 14வது ஏரோ இந்தியா 2023 சர்வதேச விமான கண்காட்சியை பிரதமர் மோடி இன்று திறந்துவைத்தார். பெங்களூரு யெலஹங்காவில் உள்ள விமானப்படை நிலையத்தில் நடைபெறும் இந்த கண்காட்சியில் 80க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்றுள்ளன. மேலும் 800 பாதுகாப்பு நிறுவனங்கள், சுமார் 100 வெளிநாட்டு மற்றும் 700 இந்திய நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இந்த நிலையில் பெங்களூரு வந்த பிரதமர் மோடி, கர்நாடகாவில் உள்ள முக்கிய பிரபலங்களையும் சந்தித்துப் பேசினார்.

முன்னதாக நேற்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற சந்திப்பின்போது, ’கே.ஜி.எஃப்.’ நடிகர் யாஷ், ’காந்தாரா’ பட இயக்குநர் ரிஷப் ஷெட்டி, ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவன தலைவரும், முன்னணி தயாரிப்பாளருமான விஜய் கிர்கந்தூர், மறைந்த புனித் ராஜ்குமாரின் மனைவி அஷ்வினி மற்றும் யூடியூப்பர் ஆர்.ஜெ.ஷ்ரத்தா ஆகியோரைச் சந்தித்தார். அப்போது கன்னட சினிமா குறித்து மோடியிடம் அவர்கள் கலந்துரையாடியதாக கூறப்படுகிறது. ரிஷப் ஷெட்டி மற்றும் யாஷ் இருவரும் கன்னட திரையுலகில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும், அதிக வரி செலுத்தும் திரையுலகமாக கன்னட திரையுலகம் இருப்பதால் தங்களுக்கு சிறந்த வசதிகளை செய்து தர வேண்டும் என ஹோம்பலே பிலிம்ஸ் தலைவர் விஜய் கிர்கந்தூர் வேண்டுகோள் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், கர்நாடகாவை திரைப்பட நகரமாக மாற்ற வேண்டும் என்றும் வெளிநாட்டில் இருப்பது போல் இங்கும் பல்வேறு வசதிகளை செய்து தர வேண்டும் என்று மோடியிடம் யாஷ் கோரிக்கை வைத்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த சந்திப்பின்போது மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் குறித்து அவரது மனைவி அஷ்வினியிடம் பிரதமர் மோடி நினைவுகூர்ந்ததாகவும் சொல்லப்படுகிறது. மேலும், மோடியுடன் அவர்கள் சந்தித்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகின.

இவர்களைத் தவிர, கர்நாடகாவை சேர்ந்த தொழிலதிபர்கள், கிரிக்கெட் வீரர்களும் கலந்துகொண்டு பிரதமர் மோடியுடன் சந்தித்தனர். கிரிக்கெட் வீரர்களான அனில் கும்ப்ளே, ஜவகல் ஸ்ரீநாத், வெங்கடேஷ் பிரசாத், மணீஷ் பாண்டே, மயங்க் அகர்வால் ஆகியோரும் மோடியை சந்தித்தனர். அதுபோல் தொழிலதிபர்களான தருண் மேத்தா, அதர் எனர்ஜியின் இணை நிறுவனர் நிகில் காமத் உள்ளிட்டோரும் மோடியைச் சந்தித்தனர்.

பிரதமர் மோடியைச் சந்தித்தது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரரான வெங்கடேஷ் பிரசாத் தன்னுடைய ட்விட்டர் பதிவில், ”பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவில் விளையாட்டு உள்கட்டமைப்பு, ஒலிம்பிக் மற்றும் விளையாட்டு கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதித்தார்” எனப் பதிவிட்டுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் வருகின்ற மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் பிரதமர் மோடி கர்நாடகாவில் உள்ள பிரபலங்களை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-ஜெ.பிரகாஷ்