இந்தியா

இந்தியாவில் பின்தங்கிய மாவட்டங்களை எடுத்துக்காட்டான நிலைக்கு கொண்டுவர வேண்டும் - பிரதமர்

இந்தியாவில் பின்தங்கிய மாவட்டங்களை எடுத்துக்காட்டான நிலைக்கு கொண்டுவர வேண்டும் - பிரதமர்

Sinekadhara

இந்தியாவில் பின்தங்கிய 142 மாவட்டங்களை எடுத்துக்காட்டான நிலைக்கு கொண்டுவர வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுடன் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி கருத்து கூறியுள்ளார்.

நாட்டின் குறிப்பிட்ட சில மாவட்ட ஆட்சியர்கள், நிதியமைச்சர்களுடன் இன்று பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது மாவட்ட அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்ட பணிகள் குறித்தும், அவற்றை விரைந்து செயல்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ’’நாட்டு மக்கள் தங்களின் லட்சியங்களுக்காக இரவு பகலும் உழைத்து கொண்டே உள்ளனர். தங்களின் லட்சியங்களையும் ஓரளவுக்கு நிறைவேற்றுகிறார்கள். நாட்டின் பட்ஜெட் அதிகரித்துக்கொண்டே போனாலும் அதற்கேற்ற வகையில் திட்டங்களும் முன்நிலைப்படுத்தப்பட்டது. ஆனால் நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன பின்னரும் சில மாவட்டங்கள் பின் தங்கியுள்ளது. நாட்டின் முன்னேற்றத்திற்கான தடைகளை வளர்ச்சியின் எடுத்துக்காட்டாக உள்ள மாவட்டங்கள் நீக்கி வருகிறது; கடந்த காலங்களில் வேகமாக முன்னேறி வரும் மாவட்டங்களாக கருத்தப்பட்டவை இன்று எடுத்துக்காட்டாக உள்ளது. மாநில முதலமைச்சர்களும் மாவட்ட நிர்வாக பணிகள் சிறப்பாக நடைபெறுவதாக நம்புகிறார்கள் என்றால் இது மாவட்ட ஆட்சியர்களின் ஒட்டுமொத்த முயற்சியே.

கடந்த 4 ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள எடுத்துக்காட்டான மாவட்டங்களில் "ஜன்தன்" கணக்குகள் 4-5 மடங்கு அதிகரித்துள்ளது. இவை மட்டுமல்லாமல் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனி கழிப்பறை, ஒவ்வொரு கிராமத்திற்கும் மின்சார இணைப்பு என வசதிகள் பெருகிவிட்டது. ஒருவரிடம் இருந்து ஒருவர் கற்றறிந்து அதனை மற்றவருக்கும் கற்பிப்பது என்பது நல்லாட்சியின் மூலதனம் ஆகும். எடுத்துக்காட்டாக உள்ள மாவட்டங்களில் வாழும் மக்கள் முன்னேற வேண்டும் என்ற ஏக்கத்தில் தங்கள் வாழ்க்கையின் பெரும்பாலான நேரத்தை வறுமையிலேயே கழித்துள்ளனர். ஒவ்வொரு சிறிய முயற்சிக்கும் கடுமையாக உழைக்கும் மக்கள் எந்த ஒரு பிரச்னையையும் தைரியமாக எதிர்கொள்கின்றனர். மாவட்டங்களில் உள்ள அடிப்படை பிரச்னைகளை அறிந்துகொள்ள மக்களிடம் நேரடியாக அவர்களின் குறைகள் கேட்டறியப்பட்டது. "டிஜிட்டல் இந்தியா" எனும் வடிவத்தில் புதிய புரட்சியை கண்டுவரும் இந்தியா எவ்விவத்திலும் பின்தங்கி விடக்கூடாது.

குறிப்பாக டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் உள்கட்டமைப்பு ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்றடைய வேண்டும்; அதேபோல அதன் சேவைகள் மற்றும் வசதிகள் இல்லம் தேடி சென்றடைய வேண்டும். மத்திய அரசின் பல்வேறு அமைச்சர்களின் தரவுகள்படி இந்தியாவில் 142 மாவட்டங்கள் பின்தங்கி உள்ளது. இந்த மாவட்டங்கள் எடுத்துக்காட்டாக உள்ள மாவட்டங்களில் செய்யப்படும் அணுகுமுறைக்கு ஒற்று செயல்பட வேண்டும். மத்திய, மாநில, மாவட்ட நிர்வாகங்களுக்கு இது ஒரு புதிய சவாலாக அமையும். இதனை அனைவரும் கூட்டாக சேர்ந்து சந்திப்போம்’’ என்றார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் இருந்து ராமநாதபுரம், விருதுநகர், காஞ்சிபுரம், கடலூர், திருச்சி, கன்னியாகுமரி மற்றும் வேலூர் மாவட்ட ஆட்சியர்கள் கலந்து கொண்டனர்.