இந்தியா

லெனின், பெரியார் சிலைகள் உடைப்பு : பிரதமர் அதிருப்தி

லெனின், பெரியார் சிலைகள் உடைப்பு : பிரதமர் அதிருப்தி

webteam

திரிபுரா மற்றும் தமிழகத்தில் சிலைகள் சேதப்படுத்தப்பட்ட சம்பவங்களால் பிரதமர் மோடி அதிருப்தி அடைந்துள்ளார்.

திரிபுராவில் நடந்த தேர்தலில் 25 ஆண்டு கால மார்க்சிஸ்ட் கட்சியை தோற்கடித்து பாஜக வெற்றி பெற்றது. இதை அந்தக் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். அப்போது, லெனின் சிலையை பாஜகவினர் உடைத்து சேதப்படுத்தினர். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் பாஜக தேசிய தலைவர் ஹெச். ராஜா, ‘லெனின் யார், அவருக்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு, கம்யூனிசத்துக்கும், இந்தியாவுக்கும் என்ன தொடர்பு, லெனின் சிலை உடைக்கப்பட்டது திரிபுராவில் இன்று. திரிபுராவில் லெனின் சிலை. நாளை தமிழகத்தில் ஈ.வே.ரா சிலை’ என்று கூறியிருந்தார். இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. பின்னர் அவர் தனது கருத்தை முகநூலில் இருந்து நீக்கிவிட்டார். 

இதையடுத்து நேற்று பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் கடும் கொந்தளிப்பு கிளம்பியுள்ளது. 

இந்த சிலைகள் சேதப்படுத்தப்பட்டதற்கு பிரதமர் மோடி அதிருப்தி அடைந்துள்ளார். இந்தச் சம்பவங்கள் குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் பிரதமர் பேசியுள்ளார். உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு உள்துறை அமைச்சகத்திற்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து சிலைகள் உடைப்பு போன்ற சம்பவங்களை தடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.