பிரதமர் மோடி  புதிய தலைமுறை
இந்தியா

"பயங்கரவாதிகளுக்கு அவரவர் மண்ணிலேயே சமாதி கட்டுகிறது புதிய இந்தியா" - பரப்புரையில் பிரதமர் மோடி

“இந்தியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தானுக்கு ஆதாரங்கள் அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தது. ஆனால் தற்போது புதிய இந்தியாவில் பயங்கரவாதிகளுக்கு அவரவர் மண்ணிலேயே சமாதி கட்டப்படுகிறது” என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

PT WEB

குஜராத் மாநிலம் ஹிம்மத் நகரில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் நேற்று பிரதமர் மோடி பேசினார்.

அப்போது பேசிய அவர், “அரசமைப்பு சாசனம் ஆபத்துக்குள்ளாகியுள்ளதாக காங்கிரஸ் தற்போது கூறி வருகிறது. ஆனால் அக்கட்சி அரசாண்ட காலத்தில் அரசியலமைப்புச் சட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்த முடியவில்லை.

எம்.பி.ராகுல் காந்தி - பிரதமர் மோடி

பாஜக அரசு அமைந்த பின்தான் காஷ்மீரில் இந்திய அரசமைப்பு சாசனம் அமலுக்கு வந்தது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடே பற்றி எரியும் என இளவரசர் கூறி வருகிறார்.

உண்மையில் காங்கிரஸ்தான் தற்போது எரிந்து கொண்டுள்ளது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெறுவதற்கு தேவையான 272 இடங்களில் கூட காங்கிரஸ் கட்சி போட்டியிடவில்லை. ஆனால் அடுத்த ஆட்சி தங்களுடையதுதான் என கனவு கண்டு வருகிறார்கள்.

காங்கிரஸ் கட்சி ஆண்ட போது இங்கு நடந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கு ஆதாரங்களை பாகிஸ்தானுக்கு அனுப்பி வந்தது. ஆனால் தற்போதுள்ள புதிய இந்தியா அந்தந்த பயங்கரவாதிகளுக்கு அந்தந்த நாட்டு மண்ணிலேயே சமாதி கட்டி வருகிறது” என்று பேசினார்.