மோடி ட்விட்டர்
இந்தியா

“ரூ. 3 கோடியே 2 லட்சம் அசையும் சொத்துகள் மட்டுமே என்னிடம் உள்ளன” - பிரதமர் மோடி தகவல்

PT WEB

பிரதமர் மோடி, வாரணாசி மக்களவைத் தொகுதியில் 3 ஆவது முறையாக போட்டியிடுகிறார். இதற்காக, வாரணாசி மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான ராஜலிங்கத்திடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது, தனது சொத்து விவரங்கள் உள்ளிட்டவை அடங்கிய பிரமாணப் பத்திரத்தையும் தாக்கல் செய்தார்.

பிரதமர் மோடி

அதில், மாத ஊதியமாக பிரதமர் அலுவலகம் தரும் தொகை மட்டுமே தனது வருமானம் என குறிப்பிட்டுள்ளார். கையிருப்பாக 52,920 ரூபாய் மட்டும் இருப்பதாக மோடி குறிப்பிட்டுள்ளார். காந்தி நகரில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கி கிளையில் உள்ள கணக்கில் 73,304 ரூபாயும், வாரணாசி - சிவாஜி நகர் எஸ். பி.ஐ. கிளை வங்கிக் கணக்கில் ஏழாயிரம் ரூபாயும் இருப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். நிரந்தர வைப்பு நிதியாக 2,85,60,338 ரூபாயை, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் வைத்திருப்பதாக பிரமாணப் பத்திரத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய சேமிப்புப் பத்திரங்களாக 9,12,398 ரூபாய் இருப்பதாக மோடி குறிப்பிட்டுள்ளார். 45 கிராம் அளவுக்கு 4 தங்க மோதிரங்கள் இருப்பதாகவும் இவற்றின் மதிப்பு 2,67,750 ரூபாய் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். TDS எனப்படும் வருமான வரிப் பிடித்தம் 3,33,179 ரூபாய் என பிரமாணப் பத்திரத்தில் கணக்கு காட்டியுள்ளார் பிரதமர் மோடி.

பிரதமர் மோடி

இந்த வகையில் மொத்தம் 3 கோடியே 2 லட்சத்து 6 ஆயிரத்து 889 ரூபாய் அசையும் சொத்துகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், விளைநிலமாகவோ, விவசாயம் சாராத நிலமாகவோ, வீடு உள்ளிட்ட குடியிருப்பாகவோ, வணிக மையமாகவோ, வாகனமாகவோ, எந்தவொரு வடிவத்திலும் தனக்கு அசையா சொத்துகள் இல்லை என மோடி குறிப்பிட்டுள்ளார்.

தனது பெயரில் எங்கும் யாரிடமும் கடன் இல்லை, தனது பெயரில் எந்த வழக்கும் இல்லை என்றும் பிரமாணப்பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார் மோடி. கல்வித் தகுதி என்ற பகுதியில், அகமதாபாத்தில் உள்ள குஜராத் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார் நரேந்திர மோடி.

பாஜக, மோடி

அசையும் சொத்துகள், அசையா சொத்துகள் உள்பட பல்வேறு அம்சங்கள் பற்றி குறிப்பிடுகையில், மனைவி என்ற பகுதியில் யசோதா பென் பெயரை அடைப்புக் குறியில் குறிப்பிட்டுள்ள மோடி, தனது மனைவி குறித்து எதுவும் தெரியாது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.