ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பகுதியில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, “காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில், தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு, அந்த சொத்து பங்கீடு செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்திருந்தார்.
இவ்விவகாரத்தில் தேர்தல் ஆணையமும் மவுனம் சாதிப்பது பல முனைகளில் இருந்தும் கேள்விகளை எழுப்பி வருகிறது.
இந்நிலையில், பிரதமரின் இந்த வெறுப்புப் பேச்சுக்கு காங்கிரஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார். தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில்,
“முதற்கட்ட தேர்தலில் I.N.D.I.A. கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றிவிடும் என்பதை உணர்ந்ததால், பிரதமர் மோடி விரக்தியில் உள்ளார். இந்திய வரலாற்றில், எந்தவொரு பிரதமரும் நரேந்திர மோடியைப் போல் இவ்வளவு தரம்தாழ்ந்து கண்ணியம் குறைவாக பேசியது இல்லை.” என்று தெரிவித்துள்ளார்.
”சர்வாதிகாரியின் உண்மை முகம் மீண்டும் நாட்டின் முன்!
இது மக்கள் தங்கள் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பறிப்பதும்,பாபா சாகேப் அம்பேத்கரின் அரசமைப்புச் சட்டத்தை அழிப்பதற்காக மற்றொரு படியாகும்.
மீண்டும் சொல்கிறேன் - இது வெறும் ஆட்சி அமைப்பதற்கான தேர்தல் அல்ல, நாட்டைக் காப்பாற்றும் தேர்தல், அரசியல் சாசனத்தைப் பாதுகாக்கும் தேர்தல்.” என்று பதிவிட்டுள்ளார்.
இது குறித்து தனது கண்டனத்தை பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின்,
”பிரதமர் நரேந்திர மோடியின் நச்சுப் பேச்சு மிகவும் மோசமானது மற்றும் மிகவும் வருந்தத்தக்கது. தனது தோல்விகளுக்கு எதிரான பொதுமக்களின் கோபத்துக்கு அஞ்சி மதஉணர்வுகளை தூண்டிவிட்டு வெறுப்பூட்டும் பேச்சை பிரதமர் நாடியுள்ளார். வெறுப்பும் பாகுபாடும்தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்.
பிரதமரின் அப்பட்டமான வெறுப்புப் பேச்சுக்கு காது கேளாத வகையில், இசிஐ (தேர்தல் ஆணையம்) வெட்கமின்றி நடுநிலைமையைக் கூட கைவிட்டுள்ளது.
I.N.D.I.A. கூட்டமைப்பு உறுதியளித்த சமூக-பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு, சமத்துவ சமுதாயத்தை உருவாக்க நீண்ட கால தாமதமான ஒரு தீர்வாகும்.
பிரதமர் அதை திரித்து, சமூக ரீதியாக பின்தங்கிய சமூகங்களுக்கு கல்வி, வேலை வாய்ப்புகள் மற்றும் பதவிகளில் உரிய பங்கை வழங்காமல் இருப்பது வருத்தமளிக்கிறது. பிஜேபியின் வஞ்சகமான திசை திருப்பும் உத்திகள் குறித்து இந்திய அணி தலைவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மோடியின் மோசமான தோல்விகளை அம்பலப்படுத்துவதில் நமது உறுதிப்பாட்டை உறுதி செய்ய வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.