மோடி, மன்மோகன் சிங் pt web
இந்தியா

ராஜஸ்தானில் மோடி சர்ச்சை பேச்சு| உண்மையில் மன்மோகன் சிங் பேசியது என்ன? #viralvideo!

பிரதமர் மோடி உண்மைக்கு மாறான தகவலைத் தந்துள்ளார் எனவும், காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் இப்படி எதையும் கூறவில்லை என்றும் அக்கட்சித் தலைவர்கள் விளக்கம் அளித்து வருகின்றனர்.

Prakash J

ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்டத்தின்போது வாக்குப்பதிவு நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம்கட்டமாக ஏப்ரல் 26-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்காக கட்சியினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருக்கும் நிலையில், பிரதமர் மோடியும் அங்கு பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ராஜஸ்தானில் பிரசாரம் மேற்கொண்ட மோடி, “காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது,​​ தேசத்தின் செல்வத்தில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள்.

இதன்பொருள், அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள். நீங்கள் கஷ்டப்பட்டுச் சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்குத் தரப் போகிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது.

மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லிம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. அப்படியென்றால், உங்கள் வளங்கள் யாருக்குப் போகப்போகிறது. இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக்கூட விட்டு வைக்காது” எனப் பேசியிருந்தார்.

இதையும் படிக்க: பூச்சிக்கொல்லி மருந்து அதிகம்.. ஆய்வில் தகவல்.. எவரெஸ்ட் மீன் மசாலாவைத் தடை செய்த சிங்கப்பூர்!

இந்தச் சர்ச்சையான பேச்சைக் கண்டித்து காங்கிரஸ் தவிர, INDIA கூட்டணியில் உள்ள தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பிரதமர் மோடி உண்மைக்கு மாறான தகவலைத் தந்துள்ளார் எனவும், காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் இப்படி எதையும் கூறவில்லை என்றும் அக்கட்சித் தலைவர்கள் விளக்கம் அளித்துவருகின்றனர். மாறாக, இதுகுறித்து அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் பேசிய வீடியோவையும் இணைத்துப் பகிர்ந்து வருகின்றனர்.

பட்டியல் மற்றும் பழங்குடி வகுப்பினர், ஓபிசி பிரிவினர், சிறுபான்மையினர், பெண்கள், குழந்தைகள் குறிப்பாக முஸ்லிம் சிறுபான்மையினர் மேம்பாட்டுக்கான திட்டங்களுடன் இணைத்துப் பேசப்பட்ட திட்டத்தின் அந்த வீடியோவில்,

“பட்டியல் மற்றும் பழங்குடி வகுப்பினர், ஓபிசி பிரிவினர், சிறுபான்மையினர், பெண்கள், குழந்தைகள், குறிப்பாக, முஸ்லிம் சிறுபான்மையினர் வளர்ச்சியின் பலன்களில் சமமாகப் பங்குபெறும் வகையில், புதுமையான திட்டங்களை வகுக்க வேண்டும்.

வளங்கள் மீதான முதல் உரிமையை அவர்கள் பெற்றிருக்க வேண்டும். நாட்டின் வளங்களில் மத்திய அரசுக்கு எண்ணற்ற பிற பொறுப்புகள் உள்ளன. அது நாட்டு மக்கள் அனைவருக்கும் சென்று சேரவேண்டும்” என மன்மோகன் சிங் பேசியுள்ளார்.

ஆனால், அதன் ஒருபகுதியை மட்டும் எடுத்துவந்து தேர்தலுக்காக, தவறான பிரசாரத்தை மோடி முன்வைத்திருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. மன்மோகன் சிங் பேசியிருக்கும் அந்த வீடியோவைப் பகிர்ந்திருக்கும் சுமந்த் ராமன், கடுமையான கண்டனத்தையும் பதிவு செய்துள்ளார்.

இதையும் படிக்க: கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கோரிய மனுதாரர்.. ரூ.75 ஆயிரம் அபராதத்துடன் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்!