நிதிஷ்குமார் pt web
இந்தியா

“இந்தியாவை இழிவுபடுத்துகிறீர்கள்” - பெண்கள் குறித்து நிதீஷ் குமாரின் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு

மகளிர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த விவகாரத்தில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் மன்னிப்பு கோரினார். இருந்தபோதும் தொடர்ந்து எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் உள்ளது.

Angeshwar G

பீகார் சட்டப்பேரவையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு விவாதத்தின் போது, மக்கள் தொகையை கட்டுப்படுத்த மகளிர் கல்வி அறிவு பெற்றிருக்க வேண்டியது அவசியம் என அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் கூறியது சர்ச்சையானது. நிதிஷ்குமாரின் கருத்துக்கு பாஜக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மகளிர் குறித்த சர்ச்சை பேச்சு விவகாரத்தில் நிதிஷ்குமார் மன்னிப்பு கேட்க வேண்டும் என டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால், பாஜக செய்தி தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா உள்ளிட்டோர் வலியுறுத்தினர்.

இதனிடையே, தனது கருத்துக்காக மன்னிப்பு கோருவதாகவும், அதனை திரும்ப பெற்றுக் கொள்வதாகவும் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். கருவுறுதல் விகிதம் குறைவதைப் பற்றி தாம் விளக்கம் அளிக்க முயன்றதாகவும், தனது கருத்து தவறாக எடுத்து கொள்ளப்பட்டதாகவும் அவர் விளக்கினார். பெண்களை தாம் மதிப்பதாக கூறிய நிதிஷ்குமார், எப்போதும் மகளிர் முன்னேற்றத்திற்காக உழைத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மகளிர் குறித்து நிதிஷ்குமார் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரம், பீகார் சட்டப்பேரவையில் எதிரொலித்தது. நிதிஷ்குமாரின் மன்னிப்பை ஏற்க மறுப்பதாக கூறி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் நிதிஷ்குமார் மீது நடவடிக்கை எடுக்க பீகார் சட்டப்பேரவை சபாநாயகர் அவத் பிஹாரி சவுத்ரிக்கு தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா கடிதம் எழுதியுள்ளார்.

அதேசமயத்தில் டெல்லியில் பாஜக தொண்டர்கள் சாணக்யபுரியில் உள்ள பீகார் பவன் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். நிதிஷ்குமாரின் கருத்துக்காக அவரைப் பதவி விலகக் கோரினர்.

நிதீஷ் குமார் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, “INDIA கூட்டணியில் இருப்பவரும், மத்திய அரசை வேரோடு பிடிங்கி எறிய பல நாடகங்களை நடத்திவரும் அரசியல்வாதி, சட்டசபையில், பெண் தலைவர்கள் முன்னிலையில் கற்பனை செய்ய முடியாத ஒன்றை தெரிவித்துள்ளார். பெண்களை இழிவு படுத்துபவர்களை எதிர்த்து அக்கூட்டணியில் இருப்பவர்கள் ஒரு வார்த்தை கூட சொல்ல தயாராக இல்லை. பெண்களைப் பற்றி இத்தகைய பார்வைகளைக் கொண்டிருப்பவர்கள் உங்களுக்கு எதாவது நன்மை செய்ய முடியுமா? உலகத்தின் முன் இந்தியாவை இழிவுபடுத்துகிறீர்கள்” என தெரிவித்துள்ளார்.