குஜராத் மோர்பியில் தொங்கு பாலம் அறுந்து விழுந்ததில் சுமார் 130 பேர் உயிரிழந்த நிலையில், இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்ட கூட்டம் நடத்தப்படுகிறது. விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் உடனடியாக செய்து கொடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் மோர்பி பகுதியில் தொங்கு பாலம் அறுந்து விழுந்த சம்பவம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள ராஜ்பவனில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அம்மாநில முதல்வர் பூபேந்திர படேல், உள்துறை இணையமைச்சர் ஹர்ஷ் சங்கவி, மற்றும் குஜராத் மாநில தலைமைச்செயலாளர், டி.ஜி.பி. மற்றும் பல்வேறு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் தொங்கு பாலம் அறுந்து விழுந்தது தொடர்பாகவும், அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணங்கள் குறித்தும் பிரதமருக்கு விளக்கப்பட்டது.
அதே நேரத்தில் மோர்பியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை உள்ளிட்ட அனைத்து அம்சங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டன. இதில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென வலியுறுத்தியதாக சொல்லப்படுகிறது. மேலும் பிரதமர் நரேந்திர மோடி நாளை மதியம் மோர்பி நேரடியாக சென்று விபத்து நடைபெற்ற இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்.
இந்த சம்பவத்தில் 130-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் நாளை மூன்றாவது நாளாக தொடர்ச்சியாக மீட்பு பணிகள் நடைபெற இருக்கிறது. அதே நேரத்தில் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து நான்கு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் சிறப்புக்குழுவும் தனது விசாரணையை துரிதப்படுத்தி உள்ளது.