நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்று சிறப்பு சிறுதானிய விருந்து நாடாளுமன்ற வளாகத்தில் நடத்தப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் இந்த சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்த விருந்தில் கம்பு, சாமை மற்றும் கேழ்வரகு உள்ளிட்ட பல்வேறு சிறுதானியங்களால் செய்யப்பட்ட உணவுகள், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு பரிமாறப்பட்டன. சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இன்று மதிய உணவு நேரத்தில் கம்பு, சாமை, மற்றும் கேழ்வரகு போன்ற சிறு தானியங்களால் செய்யப்பட்ட உணவு வகைகளை கொண்ட விருந்து நடைபெற்றது.
2023 ஆம் வருடம் சிறுதானியங்கள் ஆண்டு என சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. சிறுதானியங்கள் ஆரோக்கியத்துக்கு உகந்தது என்பதை வலியுறுத்தி அவற்றை பிரபலப்படுத்த வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. கிராமப்புறங்களில் அனைவராலும் பயன்படுத்தப்பட்ட வந்த சிறுதானியங்கள், காலப்போக்கில் அரிசி, கோதுமை, மைதா போன்றவற்றால் உருவாக்கப்படும் உணவுகள், குறிப்பாக துரித உணவுகள் பிரபலமடைந்ததால், தற்போது அதிகம் புழக்கத்தில் இல்லை என கருதப்படுகிறது.
உலகிலேயே சிறுதானியங்கள் உற்பத்தியில் இந்தியா முன்னணி வகிக்கிறது. ஆகவே பிரதமர் நரேந்திர மோடி தனது "மன் கி பாத்" போன்ற நிகழ்ச்சிகளில் ஆரோக்கியம் அளிக்கும் சிறுதானியங்களை அதிகம் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். இந்தியாவின் தொடர் முயற்சியால் ஐநா 2023 வருடத்தை "உலக சிறுதானியங்கள் வருடமாக கொண்டாட ஒப்புதல் அளித்துள்ளது.
நீரழிவு போன்ற தற்போது அதிகம் பரவி வரும் நோய்களால் பாதிக்கப்படுவோர் சிறுதானியங்களால் நல்ல பலன் பெறலாம் என கருதப்படுகிறது. அத்துடன் பிற தானியங்களுடன் ஒப்பிடும்போது, சிறுதானியங்களை விளைவிக்க தண்ணீர் தேவை குறைவாக உள்ளது என்பதால் நீர் வளம் அதிகம் இல்லாத பகுதிகளிலும் விவசாயிகள் இந்த தானியங்களை சாகுபடி செய்யலாம்.